கட்டுரைகள்

சாமானியனின் சரடு…..22…. ( கட்டுரை ) …. சங்கர சுப்பிரமணியன்.

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கே ஒரு கொடுமை ஜிங் ஜிங்னு ஆடுச்சாம் என்று கதை சொல்வார்கள். அதைப்போல தெருவில் பார்த்த பேயாக வந்த அப்பாவின் ஆவி
பார்வையிலிருந்து மறைந்து அந்த
வீட்டினுள் சென்றதை பார்த்த அவனுக்கு அவர் அங்கு உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அந்த கதை ஞாபகத்துக்கு வந்ததாம். இரவு வெகுநேரமாகி விட்டதால்  ஆங்காங்கே சில உறவினர்கள் படுத்திருக்க ஒரு கட்டிலில் மாலைகளுடன் இறந்த உடலை கிடத்தி வைத்திருந்தார்கள்.


ஒரு பக்கம் இறந்து கிடக்கும் அப்பா இன்னொரு பக்கம் நாற்காலியில் பேயாக உட்கார்ந்திருக்கும் அப்பா. இந்த மாதிரி காட்சியை பார்க்க எந்த மகனுக்கு கொடுத்து வைத்திருக்கும்? என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே நாற்காலியில் இருந்த பேய் அவனருகில் வரவும் அவனது உயிர் அவனிடமில்லை. அருகில் வந்ததும் தன்னை மறந்து உறைந்து போயிருந்தவனை உலுக்கி என்ன விஜயா எப்படி இங்க வந்தாய் என்று கேட்டதும் அது அப்பாதான் என்பதை உணர்ந்தான்.

உணர்ந்தவன் பீதியில் இருந்து விடுபட்டு கட்டிலில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் உடலைப் பார்த்தான். பிணமாய் மாலை மரியாதையுடன் கிடந்தவர் தந்தி கொடுத்தவரின் அப்பா. அதன் பின் பேய் பேசியது. இல்லை, இல்லை விஜயனின்
அப்பா பேசினார். தந்திதானே கொடுத்தோம். உன்னை யார் வரச்சொன்னது? அது சரி உன்னிடம் பணம் ஏது? உன்னை பணம் கொடுத்து யார் அனுப்பி வைத்தது? என்று கேள்விமேல் கேள்விகேட்டு அவனைத் துளைத்தெடுத்தார்.

அப்பா சாகவில்லை என்ற மகிழ்ச்சி ஒருபுறம் பேய் மறைந்து அப்பாவான திகைப்பு ஒரு புறம் உடனே பறப்பட்டு வா என்று தந்தி கொடுத்துவிட்டு இப்போது ஏன் வந்தாய் என்று கேட்டது அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ தவறு எப்படியோ நடந்திருக்கிறது என்பதை மட்டும் உணர்ந்தான். என்ன நடந்தது என்பதை விபரமாக கூறுமுன் அப்பா ரொம்ப நேரம் பஸ்ல வந்ததால் களைத்திருப்பாய் படுத்து தூங்கு என்றவர் சற்று தூரத்தில் நித்திரையில் இருந்தவர்கள் பக்கம் இருந்த இடத்தைக் காட்டினார்.

அவர் காட்டிய இடத்தில் மாலையில் அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து வந்தவர்கள் மறுநாள் காலையில் அடக்கம் செய்யப் போவதால் அங்கேயே தங்கிவிட்டனர். முக்கியமான உறவுகள் வெகுதொலைவில் இருந்து வரவேண்டுமானால் இதுபோல் இறந்தவரின் உடலை இரவில் வீட்டில் சில குடும்பங்களில் வைத்திருப்பதுண்டு. அப்படித்தான் இறந்தவரும் இறந்தபின்னும் வீட்டைவிட்டு போகாமல் படுத்திருந்தார்.

சில விருந்தினர்கள் ஊருக்கு கிளம்பம்போது இன்னும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு போக கூடாதா வந்த உடனேயே காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு வந்ததுமாதிரி ஓடுகிறீர்களே என்று சொன்னவுடன் சிலர் அதுதான் சாக்கு என்று அங்கேயே பல நாட்கள் கூடாரமடித்து எப்ப போவார்கள் என்று எண்ணும் நிலையை உருவாக்குபவர்களும் உண்டு. சிலர் இன்னும் இரண்டு நாட்கள் தங்கியிருந்தால் மகிழ்வாய் இருந்திருக்கும் என்ற எண்ணத்தை விதைத்துச் செல்பவர்களும் உண்டு.

இறந்தவர் முதல் வகையைச் சேர்ந்தவர் போல் இருக்கிறது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறோம். இவரென்னவென்றால் இறந்தும் பயமுறுத்துகிறார். அப்பாவும் அங்கேயே படுக்கச் சொல்கிறார். பக்கத்து உறவினர்கள் வீட்டுக்காவது அனுப்பி வைத்திருக்கலாம். ஊரிலிருந்து வந்தவர்களில் சிலர் அருகிலுள்ள உறவினர் வீடுகளுக்கு நித்திரைகொள்ள சென்றிருப்பதாகவும் சொன்னார்.

ஊரிலுள்வர்களுக்கெல்லாம் சிலர் நல்லது செய்வார்கள் ஆனால் பெற்ற பிள்ளைகள் மட்டும் கஷ்டப்பட்டு முன்னேற வேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல்தான் அவரின் அப்பாவும். மற்றவர்களெல்லாம் எங்கெங்கே உறங்கிக் கொண்ணிருக்க என்னைமட்டும் பிணமிருக்கும் அறையிலேயே ஒரு ஓரத்தில் மற்றவர்களுடன் உறங்கச் சொல்கிறாரே என்று எண்ணலானான். இருந்தாலும் அப்பாவுக்கு தன்மீது அக்கறையும் உள்ளது என்பதை அடுத்தடுத்து பேசும்போது உணர்ந்தான்.

அப்படி என்னதான் அக்கறை? நீ போய் படு அசதியாய் இருப்பாய் என்றவர் பயப்படாதே உன் அருகில் நானும் வந்து படுக்குறேன் என்றவர் என்னடா சாப்பிட்டாயா என்றார். அதற்கு அவன் ஆமாம் அப்பா மதுரையில் சாப்பிட்டேன் என்று சொல்லியிருக்கிறான். அதன் பின் அவனின் அப்பா சொன்னபடி வந்து படுத்ததும் ஓரளவு நிம்மதியுடன் கண்ணயர்ந்தான். சரியான நித்திரை. அந்த நித்திரையின் ஊடே ஊரே கொள்ளைபோனது போல் ஓர் ஓலம். திடுக்கிட்டு கண் அயர்ந்து பார்த்தால் பெண்கள் சிலர் ஒப்பாரியின் உச்சகட்டத்தில் அழ ஆரம்பித்தனர்.

இதுவரை எந்தவித சலனமோ கவலையோ இல்லாது தூங்கிக் கொண்டவர்கள் விழிப்பு ஏற்பட திடீர் சாம்பார் திடீர் ரசம் போல திடீரென துக்கம்ஏற்பட ஒப்பாரி களைகட்டியது. நெருங்கிய உறவினர்கள்கூட கண்ணீர் வடித்து அமைதியாய் இருக்க தூரத்து உறவுகளில் சிலர் தம் உறவின் நெருக்கத்தை மெய்ப்பிப்பதுண்டு. இனிமேல் தூங்கவா முடியும் கண் எரிச்சலுடன் புறண்டு படுக்க அப்படியே எல்லோரும் ஒப்பாரியில் எழுந்தனர்.

தமிழர் எதிலுமே உச்சம்தான். வீரம், காதல், அன்பு, பாசம், விருந்தோம்பல், நட்பு, நம்பிக்கை துரோகம், புறமுதுகு காட்டி ஓடாவிட்டாலும் பிறர்முதுகில் குத்துவது, மொழிப்பற்று, இனப்பற்றென இப்படி எல்லாவற்றிலும் உச்சத்தில் இருப்பவர்கள் துக்கத்தில் மட்டும் சளைத்தவர்களாய் எப்படி இருக்கமுடியும்? நம் மொழியை விட்டால் வேறு எந்த மொழியில் இப்படி ஒப்பாரி இருக்கும்? இருப்பதாகத் தெரியவில்லை.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button