ஏன்தான் மறந்தீரோ?… (கவிதை)… சங்கர சுப்பிரமணியன்.

ஓரறிவு முதல் ஐந்தறிவுவரை![]()
ஊர்வன தொட்டு பறப்பன வரை
பூமிவாழ் உயிரிடத்தே
பேதமுண்டோ சொல்வீரே
பெரிதாகப் படித்த பெருந்தகையே!
ஏனென்றால் அவையிடத்தே
பகுத்தறிந்திடும் அறிவுமில்லை
அறிவுக்கொவ்வா சாதியில்லை
சாதிமட்டுமா இல்லை அங்கே
மதம்பிடித்து மோதவைக்கும் மதமுமில்லை
மதமின்றிப்போனதால் மதம்காக்க
அவையிடத்தே கடவுள் என்று ஏதுமில்லை
ஆதிமனிதனிடத்தே ஆராமறிவு தோன்ற
பகுத்தறியும் அறிவுகொண்டு
உண்ண உணவென்றும் தங்க
இடமென்றும் தேடலுற்றான்
அத்தோடவனும் வாழ்வளித்த
இயற்கையை வணங்கலுற்றான்
பாதுகாப்பென வந்த போது
பலபேர் சேர்ந்தங்கே குழுவமைக்க
குழுவுக்கும் தலைவன் கண்டு
மதித்தவனை போற்றியவன்
மதித்த தலைவன் மரித்ததுமே
மரித்தவனை புதைத்துவிட்டு
புதைத்தவிடம் கல்நட்டார் போற்றித் தொழவும் செய்தார்
நட்டகல்லைக் கடவுளாக காலப்போக்கில் மாற்றிவிட்டு
இயற்கையை மறந்துவிட்டு அவ்வியற்கையையும் அழிக்கலானான்
இயற்கையை அழிப்பவனே இயற்கையை எப்படிக் கடவுளென்பான்?
எப்படி வணங்கிடுவான்?
இயற்கையை அழித்ததனால் ஏற்படும் துன்பமதை
பண்பற்ற நடத்தையினால் வருகின்ற விளைவதனை
கலியுகம் என்றுசொல்லி நம்கண்களுக்கும் திரையிட்டான்
சுவரில் எறிந்த பந்து திரும்ப வருதல்போல
வினைவிதைத்தால் வினைவிளையும்
திணைவிதைத்தால் திணைவிளையும் என்பதையும்
முற்பகல் செய்தால் பிற்பகல் விளையுமென
நம்முப்பாட்டன் எடுத்துரைத்த நீதியைப் புதைத்துவிட்டான்
பாவமென்றான் புண்ணியமென்றான்
பகுத்தறிவை முழுகடித்து இம்மை மறுமையென ஏதேதோசொல்லி
மதத்தால் மோதவிட்டு மனவழுத்தம் வரச்செய்தான்
இயற்கையைத் தொழுது இயற்கையாய் வாழ்ந்து இன்பமாய்வாழவழியிருக்க
ஏன்தான் மறந்தீரோ இயற்கையெனும் இயல்பான தெய்வமதை சொல்வீர்?
-சங்கர சுப்பிரமணியன்.
![]()