இலங்கை

பௌத்தத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த பௌத்த பிக்குகளின் கைது;  அரசின் ஆதரவில் நடந்ததா?

போதைப் பொருட்களுடன் விமான நிலையத்தில் பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவமானது பௌத்த மதத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தின் அனுசரணையில் நடந்ததா? என்ற சந்தேகங்கள் நிலவுகின்றது என்று பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமய தலைமையகத்தில்நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிக்குகள் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வருகை தரும்போது போதைப் பொருட்களை கொண்டுவந்த சம்பவத்தை விசாரணை பார்வையில் பார்க்க வேண்டும். அவர்களை காவி உடையில் வந்தவர்கள் என்றெல்லாம் கூறாமல் அவர்களை சாசனத்தில் இருந்து நீக்கி, அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பிக்குககளை ஏமாற்றி மோசடியான வகையில் தாய்லாந்துக்கு அழைத்துச் சென்று அவர்கள் திரும்பி வரும் போது பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கென பரிசுபொருட்களை போன்று போதைப் பொருட்களை அனுப்பியிருக்கலாம். இந்த விடயத்தில் பிக்குகள் சூழ்ச்சியில் சிக்கியிருக்கலாம். அந்த சூழ்ச்சியை போதைப் பொருள் வியாபாரிகளோ அல்லது வியாபாரிகளும் பௌத்த எதிர்ப்பாளர்களும் இணைந்து செய்திருக்கலாம்.

பிக்குகள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது மகாநாயக்க தேரர்களின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை இந்த அரசாங்கம் நீக்கியியுள்ளதாக தேரர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அரசாங்கம் பௌத்த எதிர்ப்பு, மதமற்ற அரசாங்கம் என்று மகாநாயக்க தேரர்கள் கூறுவதால் பௌத்த மதத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அனுசரணையில் இந்த சம்பவம் நடந்ததா? என்ற சந்தேகமும் உள்ளது. இதில் எதாவது ஒன்று நடந்திருக்கலாம். இதன் உண்மையை சுயாதீன விசாரணைகள் மூலமே கண்டறிய முடியும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *