முச்சந்தி

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி சர்வதேச நீதிமன்றில்: மனிதகுலத்திற்கு எதிரான படுகொலை விசாரணை !!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட ஒரு ஆசிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு சர்வதேச நீதிமன்றில் தண்டனை வழங்கப்பட உள்ளது. இதனால் போர்க்குற்றங்களை இழைத்த மற்றய நாடுகளின் தலைவர்களும் அச்சத்தில் உள்ளனர்.

முக்கியமாக பர்மா, கம்போடியா, இந்தோனேசியா, சிறிலங்கா போன்ற நாடுகளிலும் பல படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இந்நாடுகளின் முன்னாள் ஆட்சியாளர்களும் , பதவியில் உள்ள தலைவர்களும் பிலிப்பைன்ஸ் தலைவரின் கைதை அடுத்து கதிகலங்கிப் போயுள்ளனர்)

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) ஹேக்கில் உள்ள(Hague) சர்வதேச நீதிமன்ற விசாரணைக்காக மணிலாவில் இருந்து விமானம் மூலம் கடந்த வருடம் நாடு கடத்தப்பட்டார்.

அதேவேளை சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை தன் கைப்பட கொலை செய்ததாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே ஒத்துக் கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தியது. இவருடைய ஆறு வருட ஆட்சிக் காலத்தில் பல ஆயிரம் மக்களை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு இன்டபோலால் கைது செய்யப்பட்டார்.

சர்வதேச குற்றவியல் ICC வழக்கு

போதைவஸ்து குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான கொள்கைகளுக்காக (Zero tolerance) உள்ளூரில் இவர் பெரிதும் புகழ் பெற்றார். அமெரிக்க டைம் இதழ் இவரை ” கடுமையாக தண்டிப்பவர்” என பெயரிட்டு சிறப்பிதழை வெளியிட்டது. அவருடன் தொடர்புள்ள பாதுகாப்புக் குழுக்களால் போதை மருந்து கையாளுபவர்கள், குற்றவாளிகள், கும்பல் உறுப்பினர்கள், மற்றும் பிற சட்டவிரோத குழுக்களை தண்டனைக் கொலை செய்ததாக கருதப்படுகின்றது. இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில் டவாவோ நகரத்தை “பிலிப்பைன்சின் கொலைத் தலைநகரம்” என்பதிலிருந்து “தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் அமைதியான நகரமாக” மாற்றிய பெருமைக்கு உரியவரானார்.

மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் போதைப்பொருள் போரில் நடந்த சட்டவிரோத கொலைகள் தொடர்பாக, இன்டர்போல் (Interpol) உதவியுடன் பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.
இவர் பதவியேற்றவுடன், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் பெயரால் ஆயிரக்கணக்கான மக்கள் (போலீஸ் மற்றும் கண்காணிப்புக் குழுவினரால்) கொல்லப்பட்டனர். இது “போதைப்பொருள் போர்” (War on Drugs) என்று அழைக்கப்பட்டது.

தற்போது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விசாரணை :

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப் பொருள் மீதான கொடிய ஒடுக்குமுறையுடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டை தற்போது எதிர்கொள்கிறார். முன்னாள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஹாங்கொங்கிற்கான ஒரு தனிப்பட்ட பயணத்திலிருந்து திரும்பிய வேளை மணிலா விமான நிலையத்தில் வைத்து கடந்த வருடம் மார்ச் 11ம் திகதி பொலிஸார் கைது செய்தனர்.

81 வயதான அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படும் முதல் ஆசிய முன்னாள் அரச தலைவராக மாறியுள்ளார். தனது நாடுகடத்தலை எதிர்த்துப் போராடிய டுடெர்ட்டே, 2016 முதல் 2022 வரை பிலிப்பைன்ஸை வழிநடத்தினார். டிகொங் என்று அழைக்கப்படும் வழக்கறிஞரான ரோட்ரிகோ டுடெர்டே பிலிப்பைன்ஸின் 16 வது ஜனாதிபதி ஆவார். அவர் 22 வருடங்களுக்கும் மேலாக 1,449,296 மக்கள்தொகை கொண்ட மிண்டானாவோ மாகாணத்தின் டவாவோ நகரத்தின் மாநகரத் தலைவராக பணியாற்றினார்.
அவரே பிலிப்பைன்ஸின் வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றிய மாநகரத் தலைவர்களில் ஒருவராவார். அதற்கு முன்பு துணை மாநகரத் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாகப் போட்டியிட பலமுறை அவருக்கு வேண்டுகோள் விடப்பட்டும் 2015 வரை தவறான அரசமைப்பு எனக் கூறியும் குடும்ப எதிர்ப்பு காரணமாகவும் செவிமடுக்கவில்லை. இருப்பினும், நவம்பர் 21, 2015ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.

அவர் ஜனாதிபதி தேர்தலில் 39.01% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரது துணை ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெறவில்லை. எனவே லிபரல் கட்சியின் லெனி ராப்ரெடோ துணை ஜனாதிபதியானார்.

ஆனால் அக்டோபர் 2021 இல், ரோட்ரிகோ டுடெர்டே 2022 இல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவில்லை என்றும் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

ஆட்சியிலிருந்து விலகிய பின்னரே அவர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. நீண்ட காலமாக சட்ட ரீதியாக அவர் போராடி வந்தார். ஆனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் பேரில் மணிலாவில் கைது செய்யப்பட்ட பின்னர், பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) கடந்த ஆண்டு நெதர்லாந்துக்கு நாடு கடத்தப்பட்டார்.

நான் தான் போட்டுத் தள்ளினேன்

நான் தான் போட்டுத் தள்ளினேன் என ஒத்துக் கொண்ட முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர், சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை தன் கைப்பட கொலை செய்ததாக 14 டிசம்பர் 2016இல் தெரிவித்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக பதவி வகித்த வேளையில் டுடெர்டே,
போதை மருந்து கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தமை அறிந்ததே.

போதை மருந்து கடத்தலுக்கு எதிராக டாவோ நகரில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். டாவோ நகரில் இதற்கென பிரத்யேக படை ஒன்று உருவாக்கப்பட்டு,போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

மேலும் டுடெர்டே 14டிசம்பர் 2016 மணிலாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசுகையில், டாவோ நகரில் போதை மருந்து கடத்தியதாக கருதப்பட்ட பலரை, என் கைப்பட கொலை செய்தேன். நானே இந்த காரியத்தில் இறங்கினால் தான், இதற்கென அமைக்கப்பட்ட காவல்துறை குழுவும் இது போன்ற நடவடிக்கைகளில் தாங்களும் ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.எனவே நான் அவ்வாறு செய்தேன் என அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

டுடெர்டோ பிலிப்பைன்ஸ் அதிபராக பதவியேற்றதலிருந்து போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக கூறி, இதுவரை பல்லாயிரக்கணக்கான பேர் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் சில நகர மேயர்களும் அடங்குவார்கள்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்:

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court -ICC) நெதர்லாந்தின் டென் ஹேக் நகரில் அமைந்துள்ள ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பு ரீதியான பன்னாட்டு நீதிமன்றம் ஆகும். உலகில் இனப்படுகொலை, மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உருவாக்கப்பட்டது. இது நாடுகளுக்கிடையேயான தகராறுகளை விசாரிக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான பன்னாட்டு நீதிமன்றத்திலிருந்து வேறுபட்டது.

123 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன, ஆனால் ரஷ்யா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகள் இந்த அமைப்பை கண்டனம் செய்ததுடன் உறுப்பினராக சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ, ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இத்தனைக்கும் தெற்காசிய நாடான பிலிப்பைன்சில் சட்டவிரோத போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கும் முயற்சியிலேயே ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் ஜனாதிபதி துப்பாக்கியால் பலரை சுட்டுக்கொன்றதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து நெதர்லாந்து நாட்டின் சர்வதேச நீதிமன்றத்தில் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

ரோட்ரிகோ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும்போது அவரது ஆதரவாளர்கள் திரண்டு நின்று கோஷங்களை எழுப்பினர். நீதிமன்றில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்பதாக ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்தார்.

கைதான பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு பேசுகையில், நான் தான் நம் சட்டம் மற்றும் ராணுவத்தை வழிநடத்தினேன். உங்களை பாதுகாப்பேன் என்று கூறினேன். இதற்கான அனைத்துப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன் என கூறியிருக்கிறார். தற்போது ரோட்ரிகோ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட ஒரு ஆசிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. இதனால் போர்க்குற்றங்களை இழைத்த மற்றய நாடுகளின் தலைவர்களும் அச்சத்தில் உள்ளனர்.

முக்கியமாக பர்மா, கம்போடியா, இநதோனேசியா, சிறிலங்கா போன்ற நாடுகளிலும் பல படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இந்நாடுகளின் முன்னாள் ஆட்சியாளர்களும் , பதவியில் உள்ள தலைவர்களும் பிலிப்பைன்ஸ் தலைவரின் கைதை அடுத்து கதிகலங்கிப் போயுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button