கவிதைகள்

அஞ்ஞானப் புலம்பல்!… இரா.சம்பந்தன். ( கனடா )

மூக்கின் துணியவிழ்த்து முழுவிரலும் உறையகற்றி
ஆக்கள் கூடியினிக் கதைப்பதெல்லாம் எக்காலம்?

கோயில் குளங்கடைகள் கொண்டாட்டம் எனநாங்கள்
வாயில் சிரிப்புதிர்த்து வாழ்வதினி எக்காலம்?

பள்ளி யறைக்கதவைத் தாள்போட்டுத் தூங்காமல்
தள்ளிக் கிடக்கும்நிலை தவிர்ப்பதினி எக்காலம்?

துள்ளிவரும் குழந்தைகளைத் தூக்காமல் கைகாட்டித்
தள்ளிப் போகும்குறை முடிப்பதினி எக்காலம்?

படிக்கும் பிள்ளைகளின் பருவமதை நோய்திருடிப்
பிடிக்கும் செயலழியச் செய்வதினி எக்காலம்?

ஆச்சியையும் அப்பனையும் கண்டால் பயந்தொதுங்கித்
தாச்சி மறிப்பதெலாம் தவிர்ப்பதினி எக்காலம்?

வீடிருந்து தொழில்பார்க்கும் பிள்ளைகளின் கோபத்தால்
கூடிருக்கும் கிளிபோன்ற துயர்மறப்ப தெக்காலம்?

போனெடுத்தால் வைக்காத பொல்லாத வாய்க்கெல்லாம்
தீனெடுத்து ஊட்டாமல் தப்புவதும் எக்காலம்?

மோடிக்கும் ரம்புக்கும் முகநூலில் புத்திசொல்லும்
வேடிக்கை வேலைகளை விடுவதினி எக்காலம்?

கோடிக் கணக்கான தொழிலழிய உலகமெலாம்
தேடிக் கொண்டதுயர் துடைப்பதினி எக்காலம்?

தாக்கவரும் வறுமையினை தாமுணர்ந்து மனிதகுலம்
தூக்கி யதையெறியத் துணைபுரிவ தெக்காலம்?

அணுவுலையும் ஆயுதமும் ஆண்டவனின் முன்னிலையில்

அணுவளவும் செல்லாமை அறிவதினி எக்காலம்?

பஞ்சமகா பூதங்கள் கைகளிலே உலகமன்றி
எஞ்சிநின்ற எதுவுமில்லை இதையுணர்வ தெக்காலம்?

ஓற்றுமையும் அன்பும் உதவிகளும் இவைகளன்றி
மற்றெவையும் செல்வமல்ல தெரிந்துகொள்வ தெக்காலம்?

ஆக்கிவைத்துக் காப்பாற்றி அழித்துவிடும் தெய்வமதை
தூக்கிவைத்து மனமிருத்தித் துதிப்பதினி எக்காலம்?

இரா.சம்பந்தன்

கனடா 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *