கவிதைகள்

சித்திரையே வருகின்றாய்!… முருகேசு தயாநிதி.

சித்திரையே வருகின்றாய் – நாங்கள்
சிந்தனை இழந்து நிற்கையிலே
எத்திசையும் இந்நிலைதான் – உலகம்
மொத்தத்தில் கண்ணீரில்தான்
(சித்திரையே)

சார்வரி வருஷத்தில் – நீயும்
சர்வாதிகாரியாய் நிற்கிறாய்
சஞ்சலப் படாமல் – இங்கு
பஞ்சத்தையும் கொண்டு வருகின்றாய்
(சித்திரையே)

அடக்கமாய் அரப்புவைத்து – நாங்கள்
அங்கு இங்கு போகமாட்டோம்
அட்டகாசம் இன்றியே – இந்தப்
பட்டப்பகலை கழித்திடுவோம்
(சித்திரையே)

கைவிசேடம் பெரிதாயில்லை – இங்கு
கசிப்புக்கும் இடமில்லை
ஆடும் வெட்டவில்லை – நம்ம
நாடுபடும் பாடுணர்ந்து
(சித்திரையே)

உடுப்பு வாங்கவில்லை – நாங்கள்
உணவையும் சுருக்கியுள்ளோம்
உணர்வுதான் மேலோங்குது – உலகம்
மடுபடும் நிலைமை கண்டு
(சித்திரையே)

பலகாரம் சுடவில்லை – எல்லோரும்
நிலவரத்தையே பார்க்கின்றோம்
பலனும் பொருத்தமில்லை – காலம்
கலவர நிலையிலதான் கழிகிறது
(சித்திரையே)

நித்திரை நிமையின்றி – நாங்கள்
அந்தரத்தில் அலைகிறோம்
அபயக்குரல் கேட்கும்போதும் – இங்கு
அழகாய்க் கபடம் நடக்கிறது
(சித்திரையே)

வாயைப் பொத்தவைத்து – எங்கள்
கையையும் கட்ட வைத்தாய்
உடலை மூடவைத்து – நீயும்
உல்லாசமாய் வருகின்றாய்
(சித்திரையே)

வானரக் கூட்டங்களாய் – நாங்கள்
வடிவெடுத்து நிற்கின்றோம்
போன வருடம் போகவில்லை – அதற்குள்
புதிய வடிவாய் நீ வாறாய்
(சித்திரையே)

கடைப்பக்கம் நாடவில்லை – கண்டவர்
காறித்துப்புவார் என்பதால்
கடைப்பிடிக்கிறோம் நியதியை – கரோணா
கடல் கடந்து ஓடுமட்டும்
(சித்திரையே)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *