கவிதைகள்

சாதலுடன் போராடும் சனம்பார்த்து அழுதுநின்றாள்!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

  மருத்துவராம் மாலாவை
மருத்துவமே விரும்பியது
           தனக்கெனவே வழிதேர்ந்து 
                 தளர்வின்றி பணிசெய்தாள்
அடுத்தவர்கள் படுந்துன்பம்
அவள்துன்பம் எனநினைத்தாள்
அன்பான மருத்துவராய்
அவளங்கே பணிசெய்தாள் !
 
             நிர்வாகம் சொல்லுவதை 
                 நெஞ்சுக்குச் சொல்லிடுவாள்
            நீதியற்ற முறையிருந்தால்
                  நிராகரிக்க முற்படுவாள்
           அதிகாரம் அவளிடத்து
                  ஆணவமாய் வருமாயின்
            துணிவுடனே எதிர்கொண்டு
                   சரிவழியில் சென்றிடுவாள்   !
 
           கொரனோவின் தாக்கத்தால்
               மருத்துவத்தை நாடிநின்றார்
          அருகிருந்து மாலாவும்
                ஆறுதலைக் கொடுத்திடுவாள்
          தனக்குத் தொற்றுவருமென்று
                நினைப்பிலவள் கொள்ளாமல் 
         காப்பாற்றும் எண்ணமதை
              கருத்திருத்திச் செயற்பட்டாள்  !
 
          வீடுசெல்ல விரும்பாமல்
                ஓடியோடி பணிசெய்தாள்
          வேதனைகள் சோதனைகள்
                விரும்பியவள் ஏற்றிருந்தாள்
          காதல்நிறை கணவனுடன்
                கணநேரம் கதைத்திடுவாள்
          சாதலுடன் போராடும்
                சனம்பார்த்து அழுதுநின்றாள்  !
 
          இரவுபகல் பாராமல்
               ஏந்திழையாள் பணிசெய்தாள்
          அவள்பணியின் பரிசாக
                கொரனோவைத் தான்பெற்றாள் 
          பணிசெய்ய முடியாமல்
                தனிமையிலே விடப்பட்டாள்
          செய்திகேட்ட  கணவனுமே 
                  செயலிழந்து அழுதுநின்றான்   !
 
           முகம்றியா மதலையும்
               மூன்றுவயதுப் பாலகனும் 
          கண்ணிறைந்த கணவனும் 
              கண்ணிரில் மிதக்கவே 
          மருத்துவத்தை உயிராக
               மதித்துநின்ற அம்மங்கை
          உயிரெடுக்க காலனாய்
               வந்ததங்கே கொரனோவும்   ! 
 
            மருத்துவர்கள் அழுதார்கள் 
                 மருத்துவமும் கலங்கியது
            கொடுமைநிறை கொரனோவின்
                   கோரமதைக் கண்டவுடன்
            பணிசெய்ய சென்றவள்
                   அணைத்துவிட்டாள் மரணமதை
            அவள்குடும்பம் கண்ணிரில்
                     அமிழ்ந்துபோய் இருக்கிறதே  ! 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *