வேலி!…. தமிழ்ப்பொடியன்.

நிமிர்ந்து நின்ற எங்கட வேலி – இன்று
மல்லாக்காய் விழுந்து கிடக்கிறது.
இதற்கு ”எல்லை” என் பூட்டன் போட்டது.
“கதியால்” என் அப்பு போட்டது.
“கம்பி” என் அப்பா போட்டது.
“மட்டை “என் அண்ணா வரிந்தது.
அவனுக்கு உதவியாய் மட்டை எடுத்துக்கொடுத்தது நான்.
ஆனால் இன்று வேலி மல்லாக்காய் விழுந்து கிடக்கு.
என் பூட்டன் யார் எல்லைக்குள்ளும் போகவில்லை.
என் அப்பு கதியாலை ஆழமாய்த்தான் போட்டார்.
நான்கு வரியில் அறுக்கையாய்த்தான் அப்பா கம்பி போட்டார்.
இறுக்கமாய்த்தான் அண்ணா மட்டை வரிந்தான்.
அப்ப எங்க “பிழை” நடந்தது?
எவனோடும் எல்லைத்தகராறுக்கு போகவில்லையே.
எவனோடும் வீண் வம்புக்கும் போகவில்லையே.
எங்களின் வீட்டுக்குத்தானே வேலி அடைத்தோம்.
கம்பிகளை அறுத்து
கதியாலை தள்ளிவிழுத்தி…
பனம்மட்டைகளை புடுங்கி எறிந்து
எவனடா எங்களின் வேலியை பிச்சு எறிஞ்சது?
எங்களைக்கேக்காமல்….
எவனடா எங்களின் முற்றத்துக்கு வந்தது?
வேலி விழுந்துபோனதால் “ நாய்கள்” உள்ளே வந்தன.
நாய்களோடு சேர்ந்து “ நரிகளும்” உள்ளே வந்தன.
அந்த நரிகளோடு சேர்ந்து சில “பன்றிகளும்” உள்ளே வந்தன.
நாய்களையும் நரிகளையும் பன்றிகளையும் துரத்திவிட்டு;
கெதியில வேலியை அறுக்கையா அடைக்கவேணும்.
வேலி ஒழுங்கா இருந்தால்த்தான்
வீடு அறுக்கையா இருக்கும்.
கிணத்தடி வேலி விழுந்து போனால்
அக்கா “மானத்தோடு” குளிக்கவும் ஏலாது.
ஒழுங்கையால போற வாறவன் எல்லாம்
எட்டிப் பாத்து விட்டுத்தான் போவான்.
அது அவன்ர பிழையில்லை …
வேலியை அறுக்கையா அடைக்காதது
எங்கட பிழை.
நிமிர்ந்து நின்ற வேலி – இன்று
மல்லாக்காய் விழுந்து கிடக்கிறது.
இனி புதுசா வேலி அடைக்கும் போது
கதியால்களை கொஞ்சம் ஆழமாக போடவேணும்.
கொஞ்சம் கூடவா பக்கத்தில பக்கதிலயும் போடவும் வேணும்.
முள்ளுக்கம்பி கம்பி நாலு வரி கூட அடிக்க வேணும்.
இன்னும் கொஞ்சம் உயரமாவும் போடவேணும்.
பனம் மட்டை வரியும் போது இன்னும் கொஞ்சம் இறுக்கமா
கிட்ட கிட்ட வரியவேணும்.
நான் சொல்ல வேண்டியதில்லை அது “அண்ணனுக்கு” தெரியும்.
ஊரில இருக்கும் என் “தம்பிக்கும்” தெரியும்.
வேலி அடைக்கும் போது துணைக்கு “ நானும்” இருக்கோணும்.
அதுக்கு ஊருக்கு நான் போகவேணும்.
நிமிர்ந்து நின்ற எங்கட வேலி – இன்று
மல்லாக்காய் விழுந்து கிடக்கிறது.
மாரி வரமுதல்
சோழகக்காத்து வரமுதல்…
கெதியில வேலி அடைக்கவேணும்.
#தமிழ்ப்பொடியன்
![]()