கவிதைகள்
தேன்மொழி!…. முனைவர். கிருஷ்ண திலகா திலகா.

தித்திக்கும் தேன்மொழியே!
திகட்டாத நகைமொழியே!
உத்தியிலே உன்தூது
உலகறியா புதுத்தூது !
பத்தியிலே விட்டதூது
பரவசத்தைத் தந்தடி !
எத்தனையோ கேட்டிருந்தும்
எனக்கிது மலைத்தூது !
தென்றல் விடுதூதும் —நல்
தேன்மொழியாள் விடுதூதும்
நாரை விடுதூதும் — ஒரு
நாயகன் விடுதூதும்
அன்னம் விடுதூதும் —அந்த
அம்புலி விடுதூதும்
நண்டு விடுதூதும்—ஓடும்
நதியதன் தூதும்
கிள்ளை விடுதூதும் —நெஞ்சை
அள்ளுமலைத் தூதும்
சித்திரமே செதுக்கிய —உன்
சிந்தனை நெய்ததூதில்
சிதறுண்டு போனதடி ! _உன்
தேவாரத் தூதில்
தெய்வீகக் காதல்கண்டேன்!
தெளிந்ததோர் தூயமனத்தைத்
தெரிவித்த நளினம்கண்டேன் !
காலையிளம் பருதிகண்ட
பனித்துளி போல நெஞ்சம்
கனத்தல் கருகக்கண்டேன் !
வானவில் போல உள்ளம்
உவத்தல் மிகக்கண்டேன்!!
காதலே!!காதலே!! வா!
காலமுழுதும் காதலோடே வா!
![]()