உலகம்

தந்தையின் கொடூரச் செயல் ; நாய்க் கூண்டுக்குள் புதைக்கப்பட்ட 11 மாத பச்சிளம் குழந்தை

அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தில், 11 மாதக் குழந்தையை நாய் கூண்டில் அடைத்து மண்ணுக்குள் புதைத்த தந்தையைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தென் கரோலினாவின் லெக்சிங்டன் நகரில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதான மைக்கேல் கோமரே என்பவர் தனது 11 மாதக் குழந்தை மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய குழந்தையின் பாட்டி, குழந்தையையும் மைக்கேலையும் காணாததால் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதையடுத்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிஸார், கடந்த திங்கட்கிழமை இரவு மைக்கேல் கோமரேயைக் கட்டிடம் ஒன்றிலிருந்து கைது செய்தனர்.

எனினும், அப்போது குழந்தை அவருடன் இருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 1.30 மணியளவில், வீட்டைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் சுமார் 100 பொலிஸ் அதிகாரிகள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, வீட்டிலிருந்து சுமார் 50 அடி தொலைவில் மண் தளர்வாகக் காணப்பட்டதுடன், அதன் மேற்பரப்பில் பைன் மர ஊசிகள் சிதறிக் கிடந்துள்ளன. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்தப் பகுதியைத் தோண்டிப் பார்த்தபோது, உள்ளிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

உடனடியாக மண்ணை அகற்றிய அதிகாரிகள், சுமார் ஒரு அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த நாய்க் கூண்டுக்குள் குழந்தை அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூண்டைச் சுற்றி ஒரு துணி சுற்றப்பட்டிருந்ததுடன், கூண்டுக்குள் நிலவிய ஈரப்பதமும் இரவு நேரக் குளிர்ந்த காற்றும் குழந்தை சுவாசிக்க உதவியிருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், குழந்தையின் தாயுடன் மைக்கேல் கோமரே சில பிரச்சினைகளைக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அந்தப் பிரச்சினைகளே இச்செயலுக்கான காரணமா என்பது இதுவரை தெளிவாகவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனது செயலுக்காக மைக்கேல் எவ்வித வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம், அவரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *