இலங்கை

கட்டுநாயக்காவில் 45.5 கோடி ரூபா போதைப் பொருட்கள் பிடிபட்டன; இந்திய பொறியியலாளர் கைது

இலங்கைக்குள் சுமார் 45 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை கடத்தி வர முயன்ற இந்தியப் பிரஜை ஒருவரை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர் 46 வயதான இந்தியப் பொறியியலாளர் ஆவார். இவரை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் சோதனையிடப்பட்ட போதே கைது செய்யப்பட்டார்.

இவரது பயணப் பொதியைச் சோதனையிட்டபோது, பெரிய சொக்லேட் பாக்கெட்டுகள் போன்று பொதியிடப்பட்ட நிலையில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 19 கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான 13 கிலோ 173 கிராம் எடையுடைய 23,000க்கும் அதிகமான எக்ஸ்டஸி (Ecstasy) மாத்திரைகளும், 5 கிலோ 121 கிராம் எடையுடைய கொக்கைன் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டன.

இந்தப் போதைப்பொருட்களின் மொத்தச் சந்தைப் பெறுமதி 45 கோயே 50 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட எக்ஸ்டஸி மாத்திரைகளின் மிகப்பெரிய அளவு இதுவென சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர் பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து கட்டாரின்டோஹா நகரை வந்தடைந்து, அங்கிருந்து கட்டார் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் மூலம் புதன்கிழமை (28) இரவு 9 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களையும் மேலதிக விசாரணைகளுக்காகக் கட்டுநாயக்கா விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் சுங்க அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *