கவிதைகள்
“விளங்கிப் படித்தால் விளக்கும் தெரியும்” ….. கவிதை ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்
அனைவரும் சொல்லும் பழமொழி ஆகும்
பழமொழி என்பது பக்குவம் சொல்வது
தவறாய் விளங்கினால் தத்துவம் தெரியா
கண்டது என்பதைக் கருத்தில் எடுங்கள்
இங்கே உட்பொருள் பொதிந்தே இருக்கு
காணுவ தெல்லாம் கருத்தே அல்ல
கருத்தில் இருத்தினால் கருத்தும் விளங்கும்
கண்டதை எல்லாம் கற்பது அல்ல
கண்டதில் நல்லதைக் கற்பதே சிறப்பு
நல்லன கண்டால் தேர்ந்தே எடுத்து
படிப்பவன் பண்டிதன் ஆகியே விடுகிறான்
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
விளங்கிப் படித்தால் விளக்கும் தெரியும்
இதனைக் கண்டு விளங்கி நின்று
படித்தவன் பலரால் மதிக்கப் படுவான்
நாலு என்பது நாலடி யாரே
இரண்டு என்பது வள்ளுவர் குறளே
இதனைக் கண்டவன் எடுத்துப் படித்தால்
யாவரும் மதிக்கும் பண்டிதன் ஆவான் !
![]()