இலங்கையை இந்து மாநிலமாக்க இந்தியா இரகசியமாகத் திட்டம்; அவசியமில்லாத இடங்களில் ஆலயங்களை அமைக்க முயன்றால் மீண்டும் 83 வன்முறை நிலைமை ஏற்படலாம்

இலங்கையை இந்தியாவின் இந்து மாநிலமாக மாற்றுவதற்காக இந்தியா இரகசிய திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அதில் அநுரகுமார அரசாங்கம் சிக்கியுள்ளது என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவசியமில்லாத இடங்களில் இந்து ஆலயங்களை நிர்மாணிக்க முயன்றால் மீண்டும் 83 வன்முறை போன்ற நிலைமை ஏற்படலாம் என்பதுடன் பொன்னம்பலவானேஸ்வரம் மற்றும் கோணேஸ்வரம் போன்ற ஆலயங்கள் சிதைக்கப்படும் நிலைமையும் ஏற்படும் என்றும் அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.
தனது யூடியுப் தளத்தில் நேற்று வியாழக்கிழமை வீடியோவொன்றை வெளியிட்டே அர்ச்சுனா எம்.பி இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் அர்ச்சுனா எம்.பி மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை முழுவதும் இந்து சமயம் வளர்க்கப்பட வேண்டும் என்ற உடன்படிக்கைக்கு அநுர அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது. அதாவது இலங்கையை இந்தியாவின் இந்து மாநிலமாக மாற்ற வேண்டும் என்று இரகசிய ஒப்பந்தமொன்று செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில கூறியுள்ளார். இதன்படி இந்தியாவில் இருந்து கும்பமேளா செய்கின்ற சாமியார் ஒருவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இப்போது அநுராதபுரத்தில் இடம்பார்க்கப்படுகின்றது. அங்கு மிகப்பெரிய விஷ்ணு கோயிலை அமைக்க திட்டமிடப்படுகின்றது. இந்தியாவின் மத ரீதியான பரப்புதலுக்காக நரேந்திரமோடி இந்தியாவில் முஸ்லிம் மதங்களை சிதைக்கின்றார். அங்குள்ள மசூதிகளை அவர் உடைத்துத் தள்ளுகிறார். அதனுடைய இன்னுமொரு வெளிப்பாடாகவெ இலங்கையை நோக்கி இந்து மத ஆக்கிரமிப்பை அடுத்தக் கட்டமாக செய்கின்றார்.
இப்போது அநுர அரசாங்கத்துடன் வெளியில் சொல்லப்படாத 7 அம்ச ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளன என்று இன்று வரையில் எவருக்கும் தெரியாது. பௌத்த இடங்களில் இந்து மதத்தை பரப்புவதில் தமிழர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். கண்டி, காலி, அநுராதபுரத்தில் இந்தியாவின் அனுசரணையில் இராமர் கோயில் கட்டுவது நல்ல விடயமே. இதனை வரவேற்கின்றேன். இவ்வாறு வரவேற்பதால் அநுர அரசாங்கத்தினால் இது தொடர்பில் எனக்கு எதிராக வழக்கு தொடர முடியாது.
இதேவேளை பௌத்தத்தை பின்பற்றுகின்ற அடிப்படைவாத அரசியல்வாதிகள் பலர் இலங்கையில் இருக்கின்றனர். இந்நிலையில் உதய கம்மன்பிலவை நான் அடிப்படைவாதியாக பார்க்கவில்லை. அவர் தனது மதத்திற்காகவே கதைக்கின்றார். அநுராதபுரத்தில் இராமர் கோயிலை நிர்மாணிப்பதானது பௌத்தத்தை இல்லாமல் செய்யும் வேலை என்று உதய கம்மன்பில அண்மையில் கூறியிருந்தார். அவர் அவ்வாறு கதைத்துள்ளார் என்பதற்காக அநுரவின் டோபி ஒருவர் சீஐடியில் முறைப்பாடு செய்துள்ளார்.
அநுரவை பொறுத்த வரையில் இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் நடத்திச் செல்வதற்காக மோடியுடன் உடன்பட்டு போகின்றார். இந்தியாவினால் செயற்பாட்டால் இந்து மதத்தை பௌத்தத்திற்குள் செலுத்த முயற்சிக்கின்றனர். தன்னை மற்றையவருக்குள் செலுத்துமாறும், மற்றையவரின் விகாரைக்குள் கோயிலை கட்டுமாறும் இந்து மதம் எங்கேயும் கூறவில்லை. தான் மற்றைய மதங்களை மதித்தாலே என் மதத்தின் மீதுள்ள பற்று மற்றைய மதங்களில் இருப்பவர்களுக்கு விளங்கும். அநுராதபுரத்தில் மிகப்பெரிய அயோத்தியை அமைப்பதில் எங்களுக்கு சந்தோசம்தான். அடிப்பார்கள். தேவையில்லாமல் பொன்னம்பலவானேஸ்வரம் மற்றும் கோணேஸ்வரம் என்பன சிதைக்கப்படும்.
அநுரகுமார நீங்கள் மோடியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அநுராதபுரத்தில் மட்டுமல்ல கொழும்பிலும் கட்டுங்கள். ஆனால் அது இனவாதமாக மாறி 83ஆம் ஆண்டுபோன்று எங்களை மறுபடியும் கொளுத்தும் போது பார்த்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
![]()