ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் உள்ளாரா? ; டிரம்ப் வெளியிட்ட புதிய தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மொஜ்தபா கமேனி உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “மொஜ்தபா கமேனி உயிரிழந்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் கடுமையாக காயமடைந்திருக்கலாம்.
அவரது உடலின் இடதுபக்கம், முழங்கை மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கலாம். எனினும், அவர் உயிரிழந்துவிட்டார் என்று நான் நம்பவில்லை” எனக் கூறியுள்ளார்.

மேலும், “ஒருவேளை மொஜ்தபா கமேனி உயிருடன் இல்லை என்றால், ஈரான் மிகச் சிறந்த ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது” என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் மொஜ்தபா கமேனி படுகாயமடைந்ததாகவும், அதன்பின்னர் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அவரது தற்போதைய உடல்நிலை அல்லது இருப்பிடம் குறித்து ஈரான் தரப்பில் தெளிவான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனிடையே, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான பொருளாதார அழுத்தங்களையும் அவரது நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த பொருளாதார நடவடிக்கைகள் பலன் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ள டிரம்ப், “விரைவில் மிகப்பெரிய வெற்றியைப் பெறப்போகிறோம்” எனவும் கூறியுள்ளார்.
அத்துடன், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை தற்போது முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மொஜ்தபா கமேனியின் உடல்நிலை மற்றும் அவர் பொதுவெளியில் தோன்றாததன் பின்னணி தொடர்பில் பல்வேறு ஊகங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
![]()