இலங்கை

தாய்மார் மீதான பொலிஸாரின் பலப்பிரயோகம் : பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீதான அரசாங்கத்தின் அலட்சியத்தைக் காண்பிக்கிறது

நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமானது நீதி அமைச்சரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகளும் யாழ். மாவட்ட செயலகத்துக்கு உள்ளே காணாமல்போனோரை நினைவுகூர்ந்துகொண்டிருக்கும் வேளையிலேயே இடம்பெற்றமையானது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீதான அரசாங்கத்தின் அலட்சியத்தையும் வெறும் ‘சடங்காக’ மாத்திரமே நோக்கப்படவேண்டிய நினைவுகூரல் நிகழ்வின் தன்மையையுமே காண்பிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.தீவுகளை சுற்றிப்பார்த்தல்

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் பொலிஸாரால் இழுத்துச்செல்லப்பட்டு மாவட்ட செயலகத்துக்கு வெளியே தள்ளிவிடப்பட்டனர்.

அதுமாத்திரமன்றி பேஸ்புக் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட இந்தப் போராட்டக் காணொளியை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மாவட்ட செயலகத்துக்குள் இருந்தவாறு அவரது கையடக்கத்தொலைபேசியில் பார்வையிடும் புகைப்படமொன்றும் பேஸ்புக்கில் பரவலாகப் பகிரப்பட்டு பலரதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன், அதில் கூறியிருப்பதாவது:

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பொது இடமொன்றில் இருந்து பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது ஏன்? வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூருவதற்கான நாளில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான அரசியலமைப்பு உரிமையை அனுபவிப்பதற்குக் கூட இடமளிக்காமல் அந்த உறவுகள் வெளியேற்றப்பட்டமை அதிர்ச்சியளிக்கிறது.

அதுமாத்திரமன்றி இந்தச் சம்பவமானது நீதி அமைச்சரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகளும் மாவட்ட செயலகத்துக்கு உள்ளே காணாமல்போனோரை நினைவுகூர்ந்துகொண்டிருக்கும் வேளையிலேயே இடம்பெற்றமையானது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீதான அரசாங்கத்தின் அலட்சியத்தையும் வெறும் ‘சடங்காக’ மாத்திரமே நோக்கப்படவேண்டிய நினைவுகூரல் நிகழ்வின் தன்மையையுமே காண்பிக்கிறது. இதுதான் அரசாங்கம் வாக்குறுதியளித்த கட்டமைப்பு ரீதியான மாற்றமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button