தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக 2ஆவது நாளாகவும் தொடர் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் பெளர்ணமி நாளான நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடாத்தப்பட்டது.
நேற்றுக் காலை 7 மணியளவில் ஆரம்பமாகிய தொடர் போராட்டம் மாலை-06 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய தொடர் போராட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ், கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்ரர், கட்சியின் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர் போராட்டத்தில் சட்டவிரோத திஸ்ஸ விகாரையை உடனே அகற்று!, சட்டவிரோத விகாரைக்கு காவற்துறை காவலா?, இந்த மண் எங்களின் சொந்த மண், வேண்டாம்…. வேண்டாம்…மாற்றுக் காணி வேண்டாம்!, வேண்டும்….வேண்டும்…. பூர்வீக நிலம் வேண்டும்! ஆகிய பல கோஷங்களை எழுப்பிக் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
![]()