செம்மணி குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை

செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த புதைகுழிகளுக்கு காரணமான குற்றவாளிகளைக் கண்டறியவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் நீதி அமைச்சு தொடர்ந்து செயல்படும் என்று சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க அரியாலையில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆகஸ்ட் 25 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகும். இதனையொட்டி நீதி அமைச்சு மற்றும் அதிகாரிகளின் பங்கேற்புடன் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது 15,966 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் காணாமல் போயுள்ளதாக அடையாளங்காணப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான விசாரணைகளுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. தற்போது எமது அரசாங்கம் 375 மில்லியன் ரூபாயை இதற்காக ஒதுக்கி, 11,000 க்கும் மேற்பட்ட கோவைகளுக்கான முதற்கட்ட பணிகளை நிறைவு செய்துள்ளது. 25 விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், பாதிக்கப்பட்ட 101 குடும்பங்களுக்குத் தலா 2 இலட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, செம்மணி உள்ளிட்ட பொதுப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 2009 இல் 15 எலும்புக்கூடுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் தீவிர தலையீட்டினால் 565 எலும்புக்கூடுகள் வரை கண்டறியப்பட்டு அகழ்வாராய்ச்சிப் பணிகள் சட்டபூர்வமாக நடைபெற்று வருகின்றன. இதற்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டறியவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் நீதி அமைச்சு தொடர்ந்து செயல்படும்.
![]()