Uncategorizedகட்டுரைகள்

மாகாணச் சபைத் தேர்தலும் தமிழர்களின் இசைவாக்க நிலைப்பாடும்… ஏலையா க.முருகதாசன்

இலங்கையில் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு,அவர்களைப்பற்றிய பொது எதிர்பார்ப்பைவிட அரசியல்பற்றி அவர்களிடம் நுட்பமான அறிவு இல்லையோ என எம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

பல்லினம் வாழும் ஒரு நாட்டில் ஒரு சிறுபான்மையினம் தனது அரசியல் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டுமென்பதை தூர நோக்குடனும் தீர்க்க தரிசனத்துடனும் சிந்திப்பதிலிருந்து தவறி வெறும் உண்ர்ச்சி அரசியலுக்கும்,புகழ்பாடி நினைவு மீட்கும் அரசியலுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம் என்பது மிகவும் தெட்டத் தெளிவாகவே தெரிகின்றது.
தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு சென்ற ஒரிரு அரசியல்வாதிகளைத் தவிர மற்றைய அரசியல்வாதிகள் அனைவரும் தமிழர்களின் பெருமைபேசியே காலத்தை கடத்தி வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக அரசியல்வாதிகள் தமது கையில் எடுத்துக் கொண்ட பிரம்மாஸ்திரம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாரனையும் ,மாவீரர்களையுந்தான்.

திரு.வே.பிரபாகரன் அவர்களின் பெயரையோ அல்லது மாவீரர்களின் தியாகத்தையோ தமிழர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.அதே வேளை மாவீரர்கள் என்றும் வணக்கத்துக்குரியவர்கள் என்பதால் அவர்களின் உயிர்த்தியாகம் என்றும் போற்றுதலுக்குரியதே.அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.தமிழர்களின் அரசியலுக்கு அவர்களைப் பணயக் கைதிகளாக்கும் அரசியல்வாதிகள் அரசியலில் அறியாமையும் வறட்சித்தன்மையம் உடையவர்களே.

ஆனால் திரு.வே.பிரபாகரனின் பெயரிலும்,மாவீரர்களின் தியாகத்தின் மீதும் இசைவாக்கம் பெற்றவர்களாக தமிழர்கள் இருப்பார்களாயின் தமிழ்ப் பிரதேசங்களின் தேவைப்படும எந்த அபிவிருத்தி மீதும் மாநகரசபை தொடங்கி பிரதேச சபை வரை எதையுமே செய்யாது வெட்டிப் பேச்சுப் பேசுவதிலும் சோழர் பாண்டியர் தொடங்கி இன்றுவரை உள்ள வீரப்பிரதாபங்களைப் பேசுவதிலேயே அச்சபைகளில் பணிபுரியும் அதிகாரிகள் தொடங்கி,ஆலோசனை சொல்ல வேண்டிய மக்களும் பழைய கதையைப் பேசுவதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள்.

தனிமனிதர்களால் ஆங்காங்கே தெருவோரங்களில் கட்டப்பட்டிருக்கும் கல்யாண மண்டபங்களும் கடைகளும் ஒரு பிரதேசசihயால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தியல்ல..

நாட்டுக்கான பொதுவான அபிவிருத்திகளாக விவசாயத்துறையிலிருந்து மருத்துவமனைகள் வீதிகள் வரை நவீனமயப்படுத்தல் வேண்டும்.
அதற்கு உந்துசக்தியாக இருப்பவர்கள் மக்கள்.மக்கள் தமது பிரதிநிதிகளுக்கு கொடுக்கும் பொது அபிவிருத்திகள் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளுமஈஅழுத்தங்களும்; பிரதிநிதிகள் எடுத்துக் கொள்ளுகின்ற விடாக்கண்டனான தொடர் முயற்சிகளுமே அவரவர் பிரதேசங்களை முன்னிலைக்கு கொண்டு வருகின்ற செயலாகும்.

மண்டைதீவில் பொது விளையாட்டரங்கின் கட்டுமானத்தைச் செயல்படுத்தத் தொடங்கியவுடன் அதிலை பிழை இதிலை பிழை எனச் சொல்லி எத்தனை தடைகளைக் கொண்டுவர முயற்சித்தார்கள்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்பொழுது பார்த்தாலும் அதிலை பிழை இதிலை பிழை என்று சொல்லி நாடாளுமன்றத்தில் குரலை உயர்த்திப் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

அதில் முன்னணி வகிப்பவர் திரு.பொன்னம்பலம் குமார் கஜேந்திரகுமார்.இப்படிக் கதைத்தால்தான் பொதுமக்ளும் பார்த்தியளா என்ன இருந்தாலும் ஜீ.ஜீயின் பேரன் விசயகாரன் என்று பேசட்டும் என்பதற்குத்தான்.

எனது அனுபவமாக நான் ஒரு விடயத்தை இங்கே பதிவு செய்கிறேன்.நாங்கள் குடியிருந்த தெல்லிப்பழையில் (மகாஜக் கல்லூரியின் அயல்) அம்பனையில் மழைக் காலங்களில் மழை நீர் வெள்ளமாகி வடிந்து போக வழியில்லாமல் வீடுகளுக்குள் நுழைந்துவிடும்.

எங்களுடைய வீட்டுக்குள்ளும் வெள்ளம் வந்துவிடும்.எனது தந்தையார் விடியக்காலை பிக்கானை எடுத்துக் கொண்டு போய் பண்டத்தரிப்பு வீதியின் தெற்குப் பக்கமாக மேற்கு நோக்கிச் செல்லும் வெள்ளவாய்க்காலில் வெள்ளத்தைப் போகச் செய்வதற்காக வீதியை குறுக்காக வெட்டத் தொடங்க,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில வீட்டுக்காரரும் வந்து நின்று வீதியை வெட்டி வெட்டியதற்கு மேலாக நடந்து போகிறவர்களுக்கும் வாகனங்களுக்குமென பெரியமிகத்தடித்த இரும்பு தகட்டைக் கொண்டு வந்து பேர்டுவார்கள்.

வெள்ளம் வருடா வருடம் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளும்,வீதி வெட்டப்படும் ,வெள்ளம் வடியும் வீதியில் வெட்டிய பகுதி மூடப்படும்.
அதற்கு ஒரு பரிகாரம் காண வேண்டும் என்பதற்காக இரண்டு இரும்புக் குழாய்களைக் கொண்டு வந்து இராசகாரியத்தின் சலவைக்கடைக்கு முன்னாள் போட்டார்கள்.

அந்த இரண்டு குழாய்களும் இரண்டு வருடங்களாக அந்த இடத்திலேயே அதிகாரிகளின் ஏனோ தானோ என்ற அலட்சியத்தால் ஆடாமல் அசையாமல் இருந்தன,பிறகுதான் அவை வீதிக்கு குறுக்காகப் போட்டு மேற்குப் பக்கத்து வளவுகளுக்குள் இருந்த வெள்ளம் வழிந்தோட வழி செய்யப்பட்டன.
தமிழர் பகுதிகளில் வேலைகள் தாமதப்பட்டமைக்கு அரசு காரணமல்ல.ஏனொ தானோ என்ற அசண்டையீனமான தமிழ் அதிகாரிகளுமே காரணமாகும்.
தமிழர்கள் அப்படியிருந்தார்கள் இப்படியிருந்தார்கள் என்று சொல்வதும் அந்தத் திணைக்களத்தில் அதிகாரியாக இருந்தது தமிழன்.இந்தத் திணைக்களத்தில் அதிகாரியாக இருந்தவன் எங்கடை ஆட்கள். சிங்களவன் பியோனாக இருந்தவன் என்று கர்வமான மிதப்பான கதை கதைப்பதிலும் பெருமை கொண்ட யாழ்ப்பாணத்தவர்கள் பெரும்பான்மையான சிங்களவர்கள் இதையெல்லாம் கேட்டு காலத்துக்கும் சகித்துக் கொண்டு இருப்பார்கள் என்று நினைத்தது பெரும் தவறு என்பதை இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

தமிழர் பற்றிப் பெருமை பேசினால் போதும்,அதுதான் தமிழர்களுக்கத் தேவையான அபிவிருத்தி எதுவுமே தேவையில்லையென்பது ஒரு பிற்போக்குத்தனமான மனநிலையென்பதை இன்றளவும் தமிழர்கள் உணரவேயில்லை.
யாழ்ப்பாணக் குடாநாட்டுத் தமிழர்களை மையப்படுத்தி எழுதுவதற்குக் காரணமே இலங்கைத் தமிழர்களின் அரசியல் எத்தகையதாக இருக்க வேண்டுமென்பது தமிழர்களை மிதப்பான உசுப்பேத்தல் மனநிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற இசைவாக்கச் செயல்பாடுதான் தமிழர் அபிவிருத்தி என அவர்கள் தீர்மானித்தக் கொண்டனர்.

அத்தீர்மானத்தை தமிழர்மேல் நிர்பந்தித்து திணித்தனர்.இது அரசியலல்ல இது வெறும் உணர்ச்சியூட்டல் என்று சில முற்பேகாக்கு அரசியல்வாதிகள் சொன்ன போதும், அவர்களை தமிழினத்தில் விரோதிகள்,துரோகிகள் சிங்களவர்களின் அடிவருடிகள்,பின்கதவால் போகிறவர்கள்,எலும்புத்துண்டுக்கு அசைப்படுகிறவர்கள் என வசைபாடினர்.

இலங்கையில் தமிழர் அரசியல் எப்படி இருக்க வேண்டுமென்பதை யதார்த்தமாகச் சொன்ன அரசியல்வாதிகளை தமிழர்களின் எதிரிகளாக்கி துரோகிகள் என அவர்ளைத் தூற்றிக் கொண்எடிருப்பவர்களில் ஒருவராக இன்னமும் அதனையே செய்து கொண்டிருப்பவர் நாடாளுமன்ற உறுப்பினரான மதிப்புக்குரிய திரு.சிவஞானம் சிறீதரன் அவர்கள்.

ஒரு நாட்டில் வாழும் மக்களின் அவர்களுடைய மொழி வளர்ச்சி என்பதோ,அம்மொழி தொடர்ந்தும் நீட்சிபெற்று புழக்கத்திலிருப்பதும்,அந்நாடு ஒரே மொழியை,ஒரே பண்பாட்டு இயல்புகளைக் கொண்ட நாடெனில் அங்கு மொழிசார்ந்த பிரச்சினை எழுவது அரிதிலம் அரிது.

ஆனால் பன்மொழியும் அம்மொழிகள் சார்ந்த இனம் ஒரு நாட்டில் இருக்குமாயின் பெரும்பான்மையினம் சிறுபான்மையினம் என்ற பிர்ச்சினை எழவே செய்யும்.அது ஆட்சியாளர்களின் பாரபட்சமான அரசியல் நடவடிக்கையாலேதான் பெரும்பாலும் இடம்பெறுவதுண்டு.

ஆனால்,அரசாங்கம் தனது பெருபான்மையினம் என்ற திரட்சித்தன்மை காரணமாக தனது இனத்தையே முதன்மைப்படுத்தகிறதென்றால் அதற்குக் காரணம் என்னவென்பதை ஆராயும் போது இலங்கையில் ஏற்பட்ட இனபிரச்சினைக்குக் காரணம் சிறுபான்மையினமான தமிழர்கள் அனைத்துத் திணைக்களங்களிலும் அதிகார மையத்தில் இருந்தமையும்,இவ்வதிகாரத் தொனி காரணமாக சிங்களப் பணியாளர்களை அதிகாரிகள் அலட்சிய நோக்குடன் அணுகியமையுமாகும்.

சிங்களப் பணியாளர்களும்,தமிழர்களின் எதேச்சதிகாரப் போக்கினையும் அவர்களிடம் காணப்பட்ட கல்விக் கர்வத்தையும் நீண்ட காலமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருந்த போதிலும்,சிங்களப் பணியாளர்களும் ஆங்காங்கே சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய புத்திஜீவகளும் பெரும்பான்மையினமான தாங்கள் ஏன் இப்படி இருக்கிறோம் எனச் சிந்தித்த போதுதான் அவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிடத் தொடங்கினார்கள்.

தமிழரசியல்வாதிகளுக்குள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அரசியல்வாதிகளே தமிழர்களின் பெருமைபேசும் அரசியல் ஒரு போதும் பொருந்தாது என திருமபத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
பல்லினம் வாழும் ஒரு நாட்டில் சிறுபான்மையினத்தினர் தமது அரசியலை எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் சிந்தித்து பெரும்பான்மையினத்தை துச்சமாக நினைத்து வீராப்பு அரசியலைச் செய்தால்,ஏதுமறியாத பெரும்பான்மையினம் சிந்திக்கத் தொடங்கும் என்பதை சிறுபான்மையினம் கவனத்தில் எடுக்கவில்லையானால் பெரும்பான்மையினத்தின் அறிவுஜீவிகள் ஏனோதானோ என்றிருக்கமாட்டார்கள் என்பதை இலங்கைத் தமிழர்கள் இன்னும் குறிப்பாக வட கிழக்குத் தமிழரசியல்வாதிகள் உணராமல் விட்டது மிகத்; தவறேயாகும்.
அதிலும் வட கிழக்குக் கல்விமான்கள் இலங்கையின் அனைத்துத் திணைக்களங்களிலும்,நிர்வாகச் செயல்பாட்டு கட்டமைப்புகளிலும் கட்டளையிடும் அதிகாரிகளாகவும்,முகாமைத்துவ செயலாற்றபவர்களாகவும் இருந்தமையும் அது எக்காலத்தக்கும் சிங்கள பணியாளர்களுக்கும்,மக்களுக்கும்,அரசுக்கும் எஜமானர்களாக இருக்கலாம் என்ற கர்வநிலையே தமிழர்களுக்கெதிரான அரசின் செயலுக்கும் வழிவகுத்தது.
பிடிச்ச முயலுக்கு மூன்றுகால் என்று,சிங்கள மக்களின் மனநிலையை ஆய்வு செய்யாமல் தமிழரசியல்வாதிகள் தம்மை எஜமானர்களாக உருவகப்படுத்தியமையும் தமிழர் மீதான சிங்கள மக்களின் அதிருப்திக்குக் காரணமாகும்.

தன்னை மீறி இலங்கை முன்னேறக்கூடாது என்ற சூழ்ச்சிமிகு சதிக்கோட்பாட்டுக்கமையவே இலங்கையை இந்தியா கையாண்டு வந்தமையும் அதனால் ஏற்பட்ட ஆயுதப் போராட்டமும்,அதன் தொடர்ச்சியாக அதனைச் சொல்லிச் சொல்லியே இலங்கையரசின் செயல் திட்டங்களை புறக்கணித்துக் கொண்டிருப்பது ஆயுதப் போரை ஆதரித்தவர்களுக்கும் அதன் சுவடுகளை அரசியலின் முக்கிய அலகாகக் கொள்வதும் ஒரு தவறான அணுகுமறை என்பதை இதனை முன்னெடுப்பவர்களும்,தமிழசியல்வாதிகளும் உணர்தல் வேண்டும்.தமிழீழம் என்ற விடாப்பிடியான இசவாக்க அரசியல் ஒரு போதும் வெற்றிபெறாது என்பதை அத்தகையோர் இன்னம் உணரவில்லையெனில் எப்பொழுது உணருவார்கள்?.

இனிவருங்காலத்திலாவது தமிழரசியல்வாதிகள் காலத்தைச் சரிவரப் புரிந்து கொண்டு இலங்கையரசுடன் இணைந்து இலங்கையை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு இலங்கையர்கள் என்ற ஒற்றைச சொல்லுக்குள் தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதே சாணக்கியத்தனமாகும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button