கதைகள்

காதலே நிம்மதி.… சிறுகதை….. சோலையூர் குருபரன்

உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தவள் நேரத்தைப் பார்த்தாள் “ஐயோ!… விடிந்துவிட்டதே!… பாடசாலைக்கு முதல் நாளாச்சே…” என்றவாறு பரபரப்பானாள் கவிதா.

தாய் சுலோச்சனா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு வெளிக் காட்டாதவள் போல் குசினிக்குள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். ‘திமும் காலை உணவு கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். இப்போது வனிதாவும் சேர்ந்துவிட்டாள். வனிதாவுக்கு ஆசிரியர் நியமனமும் கிடைத்திருக்குது. அவளுக்கும் சேர்த்துக் கட்ட வேண்டும்’ என மனதுக்குள் நினைத்தவாறு சமையல் வேலையைத் தொடர்ந்தாள்.
இன்று பாடசாலைக்குச் சென்று கடமை ஏற்க வேண்டும். அதுதான் இந்தப் பரபரப்பு.

“அம்மு, ரீ போட்டு வைச்சிருக்கன் குடிச்சித்துப் போ” ”இல்லை அம்மா, பிறது குடிக்கிறன். நேரமாகுது. வெளிக்கிட வேணும்” “அதுக்குத்தான் வேளைக்கு எழும்பிரிக்க வேனும்” என்றதும் “சும்மா போங்கம்மா..” எனக் கடிந்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

முருகனூர் மகா வித்தியாலயத்துக்ககு நான்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அன்று திங்கள் கிழமை, வாரத்தின் முதல்நாள்.
பாடசாலைச் செயற்பாடுகள் பரபரப்பாக இருந்தன. வனிதாவைத் தவிர ஏனைய மூவரும் பாடசாலைக்குச் சமூகமளித்திருந்தனர். அதிபர் மூவரையும் அசெம்பிளிக்கு அழைத்து வருமாறு பிரதி அதிபரிடம் கூறிச் சென்றுவிட்டார். அசெம்பிளியில் மூவரையும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அசெம்பிளி முடிந்துமூவரும் அலுவலகத்துக்குச் செல்லும்போது வனிதா வேகவேகமாகப்பாடசாலைக்குள் நுழைந்தாள்.
இரம்மியமான காலை வேளையில் வனிதாவும் குகனும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். இருவர் கண்களிலும் ஒரு மௌனப் பார்வை. வனிதாவின் காந்தப் பார்வை ஒரு கணம் குகனை மெய் மறக்கச் செய்திருந்தது. இருவரின் அடிமனதில் இருந்தும் இனம்புரியாத உணர்வு தோன்றி ஆட்கொண்டன. ஏதோ கதைக்க வாய் திறந்தவர்கள் இனம்புரியாத உணர்வு மேலீட்டால் இருவருக்கும் இடையில் தடுமாற்றம். பழைய நட்பு இனம்புரியாத புத்துணர்வு. நட்பு புதுப்பிக்கப்பட்டது.
குகன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டவனாக “நீங்க… வனிதா… கண்டும் கனகாலம். எப்படிச் சுகமாக இருக்கிறீங்களா?” எனக் கேட்க சட்டென இயல்பு நிலைக்குத் திரும்பிய வனிதா “ம்ம்… நிங்க…” எனத் தழுதழுத்த குரலில் கேட்டாள். “ஆம்.. வாங்க அலுவலகத்துக்குள் போவோம்” என அழைத்துக் கொண்டு சென்றான்.
இருவரும் மௌனமாகச் சென்று கதிரையில் அமர்ந்தனர். இருவருக்கிடையிலும் சிறிய இடைவெளிதான்.. கடைக் கண்களால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

வனிதாவும் குகனும் ஆறு வருடங்களுக்கு முன்னர் உயர்தரம் கற்கும்போது நகரிலுள்ள ரியூசன் நிலைய மொன்றில் பல தடவை சந்தித்துப் பேசி இருந்தனர். இருவரிடத்திலும் காதல் எதுவுமில்லை. வெறும் நட்பு மட்டும்தான். இருவரும் உயர்தரம் சித்தியடைந்து, பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி இருவேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்றுவிட்டனர். இருந்தும் கவிதாவின் உள்மனதில் இனம்புரியாத நெருடல் இருந்திருக்க வேண்டும்.

இடையில் எந்தச் சந்திப்பும் இருக்கவில்லை. படித்துப் பட்டம் பெற்ற பின்னர் இருவருக்கும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் கிடைத்தது.
வனிதா நகரை அண்மித்துள்ள அழகிய கிராமமொன்றில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பா சபேசன் ஓய்வுநிலை அதிபர். அம்மா முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர். அண்ணன், அக்கா இருவரும் அரச சேவையில் இணைந்து, திருமணமாகிச் சென்றுவிட்டனர். வனிதா தாய், தநதையோடு இருக்கிறாள். ஆனால் குறும்புக்காரி. அதனால் வீட்டில“ செல்லமாக அம்மு என்றே அழைப்பார்கள். நடுத்தரத் தோற்றம், பேரழகியல்ல. அழகிதான். பொதுநிறம். சுண்டி இழுக்கும் கவர்ச்சி, கண்ணால் கவி பேசும் காந்தப் பார்வை, சிரிக்கும் போது கன்னத்தில் அழகான கன்னக்குழி, பளிச்சிடும் முத்துப் பற்கள், சுமாரான உயரம்… ஒழுக்கம் தவறாதவள்.

குகன் சாதாரண விவசாயியின் மகன். நோயாளியான தந்தை, திருமண வயதை எட்டிய இரு சகோதரிகள். இருவரும் அரச தொழில் செய்தாலும். திருமணம் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் குடும்பத்தைச் சார்ந்தது என்பதால் அந்தப் பொறுப்பு குகனைச் சார்ந்திருந்தது. ஒரு அக்காவுக்குத் திருமணம் முற்றாக இருந்தது. வீட்டு வேலை முடியவில்லை. தங்கைக்குத் தற்போதைக்கு அவசரமில்லை, என்றாலும் பொறுப்புத்தான்.

குகன் படிக்கும் காலத்தில் பொறுப்புக்களை மனதில் கொண்டு காதலில் இருந்து விலகி இருந்தான். வனிதாவும் அப்படித்தான்.
பாடசாலை அதிபர் நால்வருக்கும் தேநீர் சிற்றுண்டி வழங்கி, வாழ்த்திப் பிரதி அதிபரைச் சந்திக்குமாறு அனுப்பி வைத்தார்.
பிரதி அதிபர் வழங்கிய நேரசூசிப்படி முதல்நாள் பதட்டத்துடன் கற்றல் பணியில் ஈடுபட்டனர்.

குகனும் வனிதாவும் சந்தித்த போதெல்லாம் கண்களால் பேசிக் கொண்டனர். இடையிடையே ஓரிரு வார்த்தைகளும் அடக்கம்.
தினமும் பாடசாலை விட்டதும் மனதை வருடிக் கொண்டிருந்த பல உணர்வுகளோடு இருவரும் வீடு திரும்பி விடுவார்கள்.

“என்ன இது, மனம் தடுமாறுதே… குழப்பமாக இருக்கிறது. இது என்ன காதலா … ” என நினைத்தவாறு உறங்கிவிடுவாள். தினமும் அவள் கனவில் குகன் வந்து செல்வான்.
ஆறு வருடத்துக்குப் பின்னர் சந்தித்த முதல் சந்திப்பு தினமும் நிழலாடிக் கொண்டிருப்பதை வனிதா உணர்கிறான். குகனுடன் தினமும் பேசி உறவாட வேண்டும் என்ற ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு வாட்டி எடுத்தது.

‘எனக்குள்ளது போல்தான் குகனுக்கும் இருக்குமோ. என்னவென்று ஒன்றும் புரியவில்லையே’ என்ற புதுவிதமான உணர்வுகளோடு தினமும் தலையணையை அணைத்துக் கொண்டு புரண்டு புரண்டு தூங்க முயற்சிப்பாள். இறுதியில் தூக்கம் அவள் கண்களைச் செருகிக் கொள்ளும். சுகமான நினைவுகளோடு உறங்கிவிடுவாள். உயர்தரம் கற்கின்ற காலத்தில் அவள் அடிமனதில் புதைந்து கிடந்த தூய்மையான அன்பு முதல் சந்திப்பிலேயே வெளிப்பட ஆரம்பித்திருந்தது. அதுதான் வனிதாவிடம் காணப்பட்ட மாற்றம்.

இதே நிலைதான் குகனுக்கும் ஏற்பட்டிருந்தது. அவன் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

குகனைப் பார்க்க வேண்டும், சிறிது நேரமாவது பேச வேண்டும். எப்படியாவது தன் உணர்வுகளைக் கூறிவிட வேண்டும் என்பதற்காகத் தினமும் ஏழு மணிக்கு மன்பாகவே பாடசாலைக்குச் சென்று விடுவாள். அங்கு பொனதும் பதட்டமும் பயமும் அவளை ஆட்கொண்டுவிடும். குகன் சிறிது நேரம் தாமதித்தால்கூட ‘இன்று லீவோ, ஏன் இன்னும் வரவில்லை. ஏதும் என்னவுமோ? தெரியவில்லையே’ எனப் பதட்டமாகி விடுவாள். இருந்தாலும் சக ஆசிரியர்கள், மாணவர்கள் சந்தேகப்படும் வகையில் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதில் மிகவும் உறுதியாகவும் இருந்தாள்.

அன்று குகனைக் கண்டதும் புது உற்சாகத்துடன் “குட் மோனிங்” சொல்ல அவனும் குட் மோனிங் ரீச்சர்” எனக் கூறி உற்சாகமாக வரவேற்பான். “என்ன நீங்க மத்தவங்க மாதிரி ரீச்சர் என்று சொல்றீங்க, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. இனிமேல் வனிதா என்றே சொல்லுங்கோ” எனறவாறு காந்தப் பார்வை கலந்த புன்சிரிப்போடு நளினமாக விலகி வகுப்பறைக்குச் சென்றாள்..

-2-
இடை இடையே சந்திப்பு சிறு உரையாடலென ஒரு மாதம் கடந்தது. வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிக்கென ஆசிரியர்களைப் பிரித்த போது இருவரும் ஒரே இல்லத்துக்குள் வந்துவிட்டனர்.

வனிதாவுக்கு மிகச் சந்தோசம். கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி குகனோடு நெருங்கிப்பழக ஆரம்பித்தாள். தனது காதலை வெளிப்படுத்தப் பலமுறை முயன்று பயம் தடுத்தமையால் கூறுவதைத்தவிர்த்துக் கொண்டாள்.
நாளை இல்ல விளையாட்டுப் பேட்டி. தீவிரமாக இல்லச் சோடனை, பிற கருமங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்ததனால் நேரம் போனதே தெரியவில்லை. நேரம் இரவு 7.30 தைத் தாண்டியிருந்தது.

“குகன் எனக்கொரு உதவி செய்வீங்களா? நீங்கள் போகும் போது பைக்கில் நானும் வரலாமா? நேரம் போயித்து” எனத் தயக்கத்துடன் கேட்டாள் வனிதா. அவளை ஏற இறங்கப் பார்த்த குகன் “ம்ம்.. ஹெல்மெட் இல்லையே” என்றதும் “என்னிடம் இருக்கிறது. நான் போய் பஸ் தரிப்பில் நிற்கிறேன்” எனக் கூறிக் கொண்டு மைதானத்துக்குள் நின்ற சரவணன் ஆசிரியரிடம் விடைபெற்றப் புறப்பட்டாள்.
சில நிமிடத்தில் அங்கு வந்த குகன் பஸ் தரிப்பில் தனிமையில் நின்றிருந்த வனிதாவை ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்றான்.

“குகன் மெதுவாக ஓட்டுங்கோ” எனப் பதட்டமும் பயமும் கலந்து ஆக்கிரமிக்கத் தைரியத்தை வரவிழைத்துக் கொண்டு “குகன் உங்களை முதல் நாள் பாடசாலையில் சந்தித்தது முதல் உங்களைப் பற்றிய நினைவுகள் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கு. நான் நானாகவே இல்லை. உங்கள் நினைவுகள் என்னைப் பாடாகப் படுத்துதுது. இனிமேலும் என்னால் தாமதிக்க முடியவில்லை. உங்களை மறக்கவோ பிரியவோ தைரியமில்லை. நான் உங்களைக் காதலிக்கிறேன். உங்கள் வீட்டாருடன் பேசி உங்கள் முடிவைக் கூறுங்கள். அவசரமில்லை. உங்கள் வார்த்தை ஒன்றே போதும். இதனைக்கூறப் பலமுறை முயற்சித்தும் தைரியம் வரல்ல. நான் இதுவரை காத்த விரதம், வெட்கம், பயம் எல்லாவற்றையும் புறந்தள்ளி வைதது என் உள்ளக் குமுறலை கூறிவிட்டேன். இனி உங்கள் முடிவுதான்” எனத் தழுதழுத்த குரலிலில் வனிதா கூறியதும் இருவருக்கிடையிலும் நீண்ட மௌன்ம்.

“இதில் நிறுத்துங்கோ. இங்கே இறங்கிக்கிறேன். அருகில்தான் வீடு. ஹெல்மெட்டை நாளைக்கு ஸ்கூலுக்குக் கொண்டு வாங்க. குட் நைட்” குகனும் வணக்கம் கூற விடை பெற்றுச் சென்றாள். குகன் மகிழ்ச்சியையும் வீட்டுச் சுமையையும் சுமந்து கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான்.

மனதை இறுக்கிக் கொண்டிருந்த சுமையை இறக்கி வைத்த மகிழ்ச்சியோடுயோடு தூங்கிவிட்டாள்.
இன்று விளையாட்டுப் போட்டி. இருவரும் நேரத்தோடு பாடசாலைக்கு வந்திருந்தனர். குகனும் எதுவும் கூறவில்லை. வனிதாவும் அவனிடம் கேட்கவில்லை. இருவர் முகமும் மலர்ந்திருந்தன.

குகனின் குடும்ப நிலவரத்தை வனிதாவும் அறிவாள்.
மூன்றாம் நாள் இரவு வனிதாவின் கைப்பேசி அலறியது. “நான் குகன். வீட்டில் எல்லோரிடமும் கதைத்தேன். சம்மதம் கூறிவிட்டனர். ஆனா ஒன்று…” என இழுத்தான். “என்ன குகன் எதுவானாலும் சொல்லுங்கோ” “அக்காவுக்கு அதுத்த மாதம் திருமணம் முடிவாகிவிட்டது. வீட்டை முடிக்துக் கொடுக்க வேணும்.

தங்கைக்கும்க்கும் வீடு கட்ட வேணும். அதனால் இரண்டு வருடம் அவகாசம் கேட்கச் சொன்னார்கள்” “அதுக்கென்ன இரண்டு வருடம்தானே நான் காத்திருக்கிறேன். ஏதும் உதவி தேவையென்றால் என்னிடமும் கூறுங்கள் நானும் உதவுகிறேன். நீங்கள் சம்மதம் சொன்னதே போதும்” எனக் கூறி நிறைவு செய்தாள்.
குகனின் வாயால் சம்மதம் என்பதைக் கேட்க மூன்று நாட்களாகத் தவிப்பில் இருந்த வனிதா அந்தரத்தில் மிதப்பது பொல் உணர்ந்தாள். பல இதமான எதிர்கால நினைவுகளோடு சுகமாகத் தூங்கினாள்.

பாடசாலையில் தமது உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள முடியாது என்பதால் இருவர் கைப்பேசிகளும் இரவு 9.00 மணிக்குப் பின்னர் அலறும். இருவரும் காதலைப் பரிமாறிக் கொள்வார்கள். வனிதா பல எதிர்காலக் கனவுகளோடு மனதால் அவனோடு வாழத் தொடங்கிவிட்டாள்.

-3-
காலம் வேகமாகக் கடந்தது. இவர்களின் காதலைப் பற்றித் தெரிந்த சில ஆசிரியர்களும் பகிடி பண்ண ஆரம்பித்தனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மேலதிக ஆசிரியர் ஆளணிப் பட்டியலில் குகனை உள்ளடக்கி உடன் செயற்படும் வண்ணம் அம்பலபுரம் மகா வித்தியாலயத்துக்கு இடமாற்றம் வந்திருப்பதாகக் கடிதத்தினை அதிபர் குகனிடம் கொடுத்தார். குகனுக்குப் பழக்கப்பட்ட கிராமம் என்பதனால் அவன் அதிர்ச்சியடையவில்லை. செய்தியைக் கேட்டதும் வனிதா நிலை குலைந்து போனாள்.

அன்றைய தனமே தன்னிடம் இருந்த பொறுப்புக்கள், ஆவணங்களை அதிபரிடம் முறைப்படி ஒப்படைத்துக் கடிதமும் பெற்றுக் கொண்டு, பாடசாலை விட்டதும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட ஆயத்தமாகும் போது வனிதாவின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் வெளிவருதைக கண்ட குகன் இனிமேலும் தாமதித்தால் அழுதுவிடுவாள் என்பதை உணர்ந்து விடை பெற்றுச் சென்றான்.

வீட்டுக்குச் சென்ற வனிதா “அம்மா தலை வலிக்கிது. டிஸ்ரப் பண்ணாதீங்கோ. கொஞசம் ரெஸ்ட் எடுக்கிறன்” எனக் கூற, “ கொஞ்ச நாளாக உன் போக்கு நல்லா இல்ல. எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கா. என்ன ஏதும் வருத்தமா” “அப்படி ஒன்றுமில்லை அம்மா. வேலைக் களைப்புத்தான்.. வேறொன்றுமில்லை” எனக் கூறிக் கொண்டு அறைக்குள் நுழைந்தவள்கைப்பையை மேசைமீது வீசிவிட்டு கட்டிலில் விழுந்து விம்மி விம்மி அழுதாள். கைப்பேசி அலறும் சத்தம் கேட்டு எடுத்துப் பேசினாள். குகன் வனிதாவுக்கு ஆறுதல் கூறி ‘இரவைக்கு அழைக்கிறன்’ எனக் கூறித் தொடர்பைத் துண்டித்தான்.

“அம்மு, என்ன நடந்தது. கண் கிவந்திருக்கு. அழுதையா? அப்படி என்ன நடந்தது. இதச் சாப்பிட்டுத்துப் பெனடோலைப் போட்டுத்து ரெஸ்ட் எடு. பிறகு வாறன்” என மேசைமீது சாப்பாட்டையும் பெனடோலையும் வைத்துவிட்டு அலுவலகத்துக்குப் புறப்பட்டாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை வனிதாவின் கைப்பேசி அழைப்பு. “குகன் இன்று மாலை 4.00 மணிக்கு நாவலடி கடற்கரைக்கு நண்பிகளோடு போறம் நீங்களும் வாறீங்களா” என்றதும் “நீங்க நண்பிகளோடு போகைக்க நான் எதற்கு” “இல்ல இல்ல உங்களப் பிறண்சுக்கு அறிமுகப்படுத்த வேணும். சும்மா கொஞ்ச நேரம் வந்துட்டுப் போங்க” “ம்ம் சரி வாறன். கொஞ்ச நேரம்தான்” “சரி சரி கட்டாயம் எதிர்பார்க்கிறேன்”
நண்பிகள் புனி, புவனா, வதனா, பிருந்தா எல்லோருமாகக் கடற்கரைக்குச் சென்று கடலை, பொரி, சுண்டல், நொருக்குத் தீனியுடன் காத்திருந்தனர்.“வனி அதோ உன்ர ஆள்.. அவர்தானே? ஹான்சம், நல்ல ஸ்மார்ட். நடந்து வருவதே தனி அழகு” “சும்மா இருடி. வனிக்கு வில்லியாகி விடுவா போலிருக்கு” “வாயை மூடுங்க கிட்ட வந்துத்தான். வனிக்கு ஏற்ற ஜோடிதான்” என நண்பிகள் கிலாகித்துக் கொண்டிருந்தனர். வனிதா எழுந்து சென்று குகனை அழைத்து வந்து நண்பிகளை அறிமுகப்படுத்தினாள். எல்லோரும் அமர்ந்திருந்து பலதும் பேசி தின்பண்டங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“இப்படி இருந்தா என்ன ஆவது. நம்ம ஏன் குறுக்க நிற்க. அவர்கள் இருவரும் உலாவி வரட்டுமே” எனக் கூறி இருவரையும் எழுப்பிவிட்டாள் புவனா. இருவரும் தயக்கத்துடன் எழுந்து சென்றனர்.

மாலை நேரம். ஆதவன் அடிவானில் தன் செங்கதிர்களைப் பரப்பிக் கொண்டிருந்தான். குளிர்ந்த இதமான கடற்கரைக் காற்று மெதுவாக இருவரையும் வருடிச் சென்றது. வனிதா தன்னை மறந்து தன் வலக் கரத்தால் குகனின் இடக்கரத்தை மெதுவாகப் பற்றினாள். சிறு மௌனம். இரு மனமும் கலந்தன. நகர்ந்து சென்றார்கள். ஏதோ ஒரு உணர்வு, மெதுவாகத் தன் கரத்தை விடுவித்தாள். இருவரும் பலதையும் மனம்விட்டுப் பேசினர்.“குகன் நீங்க போக வேணும். நேரமாகுது. வாங்க போவோம்” என்றவாறு நண்பிகளை நோக்கி நடந்தார்கள்.
நண்பிகள் ஆளுக்காள் பகிடி பண்ணிக் கொண்டு எல்லோரும் புறப்பட்டுச் சென்றனர். அன்றிரவு மலர்ந்த நினைவுகளோடு நன்றாகத் தூங்கினாள் வனிதா.
வனிதா தன் காதல் விடயத்தைத் தாய்க்கும் இரு சகோதரங்களுக்கும் கூறியிருந்தாள். சந்தர்ப்பம் வரும்போது தந்தையிடம் கூறிச் சம்மதம் பெறுவதாக உறுதியளித்ருந்தாள் தாய்.

வனிதாவின் தந்தை சபேசன் கண்டிப்பான ஓய்வு பெற்ற அதிபர். எங்கும் எதிலும் கவனமாக இருப்பார். முடிவெடுத்தால் மாற்றுவது சிரமம். தாய் சுலோச்சனா எதையும் சமாளித்துப் போகக் கூடியவள். பிள்ளைகளும் அவ்வாறுதான். அவர்கள் தந்தையை எதிர்த்துப் பேசியதில்லை. அத்தனைமரியாதை அவர்மீது. அதனால்தான் தாய் அவரிடம் கூறுவதற்குப் பயந்தாள்.

ஒரு நாள் திருமண விருந்துபசாரமொன்றில் தனது நெருங்கிய நண்பர் நடேசனைச் சந்திக்கிறார் சபேசன். இருவரும் உணவு உண்டு கொண்டிருக்கும் போது “மச்சான் என்ட இளைய மகன் தாதிய உத்தியோகத்தராக வேலை செய்கிறான். உன்ட மகள் வனிதாவை அவனுக்குப் பேசலாம் என்றிருக்கிறன். உன் முடிவைச் சொன்னால் பேசி முடிவாக்கலாம” என்றதும் “மச்சான் இதுல நான் மட்டும் முடிவெடுக்க இயலாது. எல்லோரிடமும்பேசி முடிவைக் கூறுகிறேன். ஓய்வூதிய விடயமாக அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார் சபேசன்.

சபேசன் மனைவியிடம் விடயத்தைக் கூறியதும் “நம்ம புள்ளையொடு படிப்பிச்ச பொடியன் ஒருவன் இவளக் காதலிக்கிறானாம். கொஞச நாளாக இவளுக்கும் விருப்பமாம். அந்தப் பொடியனிடம் முடிவு சொல்லவில்லையாம். அதப்பற்றி இன்றுதான் கூறினாள். அவள் கதைக்கிறதப் பார்த்தா இவளுக்கும் காதல் போலத்தான் இருக்குது. நல்ல பொடியனாம். உங்களிட்ட சொல்ற பயத்தில என்னிட்டச் சொன்னாள்” என்றதும் “அவளிடம் எதுவும் பேசாத விசாரித்துப் பார்த்து அவங்கட வீட்டுக்குப் போய்க் கதைப்பம். பேர், ஊரக் கேட்டுத் தெரிந்து கொள்”
ஒரு சனிக் கிழமை வனிதாவின் தாயும் தந்தையும் குகனின் வீட்டுக்குச் சென்றனர். சபேசன் தனது நண்பனின் மகனை மனதில் இருத்திக் கொண்டு பேச்சை ஆரம்பித்து, மூன்று மாதத்துக்குள் திருமணம் நடக்க வேண்டும் என விடாப்பிடியாக இருந்தார். “சகோதரிமார் இருவரும் திருமணம் செய்யாதிருக்கையில் மகனுக்குத் செய்தால் ஊர் பலதும் பேசும். இரண்டு வருசம் பொறுத்திருங்கள் நாங்களே அவனை அனுப்பி வைக்கிறம். அதுவரையும் பொறுத்திருங்கள்” எனக் குகனின் தந்தை கெஞ்சிக் கேட்டார். “மூன்று மாதத்துக்குள் திருமணம் என்றால் செய்வோம். இல்லையென்றால் வேறு இடம் பார்த்துக் கொள்கிறோம்” என ஒரே முடிவாகக் கூறிப் புறப்பட்டனர்.

கணவனின் தீர்மானத்தில் சுலோச்சனாவக்குத் துளிகூட விருப்பமில்லை. மகளின் எதிர்கால நல்வாழ்வினைக் கருத்தில் கொண்டவளாகச் சோகத்துடன் பின்தொடர்ந்தாள்.

“மகன் உண்ட தீர்மானம் என்னெண்டு சொல்லு. அதன்படி செய்வோம்” “அப்பா நீங்க சொன்னதுதான் சரி என்ன திமிரோடு பேசிட்டுப் போறாரு. வனிதா எனக்கெண்டிருந்தா யாராலும் தடுக்க முடியாது. பொறுத்துப் பார்ப்போம்” என ஒரே முடிவாகக் கூறிவிட்டான். நடந்தது எல்லாவற்றையும் குகன் வனிதாவிடம் கூறியதும் நிலை குலைந்து போனாள்.

இருவரும் வீட்டுக்கு வந்ததும் “அப்பா குகனின் வீட்டுக்கு இப்ப ஏன் போனீங்க? நாங்கள் இருவரும் பேசித்தான் இரண்டு வருடம் கழித்துத் திருமணம் செய்வதெண்டு முடிவெடுத்தோம். அதுக்குள்ள நீங்க எல்லாத்தையும் முறித்துப் போட்டு வந்திருக்கீங்களே” என்றதும்
சீறிப் பாய்ந்து “ஓ கொம்பு முளைச்சித்துதோ? என்னை எதித்துப் பேசிறையா? யார் சொல்லித் தந்தா? நீங்க பேசி முடிவெடுத்துத்து என்னக் கேனயனாக்கிப் போட்டீங்களே. அவங்க ஒத்து வந்தா நடக்கும். இல்லையெண்டா நான் பாக்கிற பைனக் கட்டிக்கோ. அதவிடுத்து ஏதாச்சும் செய்தா என்ன உயிரோடு பார்க்க மாட்டீங்க. இதில் எந்த மாற்றமுமில்லை” எனக் கூறிக் கொணடு கொபத்துடன் அறைக்குள் நுழைந்தார்.

தாயும் மகளும் விறைத்துப் போய் ஆளை ஆள் பார்தனர்..“நான் என்னத்தச் செய்ய அவரின் பிடிவாதம் உனக்குத் தெரியுமே? அந்தளவு பாசமும் உன்மேல் வச்சிருக்காரு” எனக் கூறிக்கொண்டு அவசரமாகக் குசினிக்குள் நுழைந்தாள் சுலோச்சனா.

-4-
வனிதா செய்வதறியாது அழுது கொண்டு தன் அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்துவிட்டாள். தலையணை நனைந்தே விட்டது. பகல், இரவுச் சாப்பாடு எதுவும் சாப்பிடவில்லை. கைப்பேசி மெதுவாக அலறியதும் எடுத்தாள் மறுமுனையில் குகன். “வனி நீயே சொல்லு அக்காமார் இருக்க நம்ம திருமணம் நடந்தா ஊரவங்க என்னத்தப் பேசுவாங்கெண்டு. அதவிடுத்து எதிர்த்து நின்றாலும் அவரின் ஆசீர்வாதம்

நமக்குக் கிடைக்காது. அதனால் பொறுத்திருப்போம். அவர் மனம் மாறலாம்” என்றதும் “நான்தான் பாதிக்கப்பட்டிருக்கிறேன்” எனக் கூறி விம்மி விம்மி அழுதாள். ஒருவாறு அவளைச் சமாதானப்படுத்திப் பின்னர் கதைப்பதாகக் கூறித் நிறுத்தி கொண்டான்.

சபேசனிடம் பலரும் பேசிப் பார்த்தனர் விட்டுக் கொடுக்கவில்லை. நண்பன் நடேசனின் மகன் கார்த்திக்கைப் பேசி முடித்துவிட்டார். ‘அவரை எதிர்க்க யாரிடமும் துணிச்சலில்லை. ஏதும் தப்பாச் செஞ்சித்தாரெண்டா நமக்குத்தான் அவமானம். அவரின் படிவாதம் உனக்குத் தெரியுந்தானே’ என எல்லொரும் கூறக் ‘கரைப்பார் கரைத்தால் கல்வும் கரைந்துவிடும்’ என்பதற்கிணங்கக் குகனின் சம்மதத்தோடு கட்டுப்பட்டாள். திருமணமும் நடந்து முடிந்தது.
முதல் காதல் நினைவுகள் வனிதாவின் அடிமனதில் பதிந்திருந்தது. ‘இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்துக் கொண்டிருந்தாள். அந்நினைவுகள் இடைக்கிடையே வந்து தலைகாட்டிச் செல்லும். திருமணம் நடந்து ஒரு வருடமும் கடந்துவிட்டது.

குகனின் மூத்த அக்காவுக்கும் திருமணம் நடந்திருந்தது. வீட்டை முடித்து அக்காவிடம் ஒப்படைத்துவிட்டான். மற்ற தங்கைக்குப் பேசிய மாப்பிள்ளை வீடு தேவையில்லை எனக் கூறிவிட்டார். திருமணத் திகதியும் குறித்தாகிவிட்டது. குகனின் சுமைகள் ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டிருந்தன.
அடுத்த ஆறு மாதத்துக்குள் நாட்டில் கொரோனாத் தொற்றுத் தீவிரமடைந்திருந்தது. பலர் பாதிக்கப்பட்டுச் சிலர் இறந்து கொண்டிருந்தனர். வனிதாவின் கணவன் கார்த்திக் கொரோனாத் தொற்றுத் தடுப்புக்கான சிறப்பு வைத்தியசாலையில் தாதி உத்தியேகத்தராகப் பணியாற்றிக் கொண்டிருந்தான். பழைய சந்தோசம் வனிதாவிடம் காணப்படவில்லை. அவளிடம் இருந்த புன்சிரிப்பைக் காணமுடியவில்லை. நாட்டில் ஊரடங்குச சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டமையினால் எவரும் வெளியில் நடமாடுவதில்லை. குகனின் தங்கைக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்த காலத்தில் மிக எளிமையாகத் திருமணம் நடந்திருநதது.

சபேசனின் கைப்பேசி அலறியது. புது இலக்கம். அழைப்பினை எடுத்ததும் “நான் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலையில் இருந்து ரகு பேசிறன். உங்க மருமகன் கார்த்திக் கொரோனாத் தொற்றால் பாதிப்படைந்து அங்கோடை IDH மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருக்கிறார். விபரங்களைப் பின்னர் தெரியப்படுத்துறோம்” எனக் கூறித் தொடர்பைத் துண்டித்துவிட்டார். எல்லோரும் துடித்துப் போயினர்.

வனிதா சித்தப் பிரமை பிடித்தவள் போலானாள். மூன்று நாட்களாக விபரம் எதுவும் தெரியவில்லை. நான்காவது நாள் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டதும் பதறிப்போய்விட்டனர். ‘கார்த்திக்கின் பூதவுடலைக்கூடக் காட்டாமல் அரச பாதுகாப்புடன் எரித்துவிட்டனர் என்ற செய்தியும் நிலை குலையச் செய்தன. வனிதா எவருடனும் எதுவும் பேசுவதில்லை. மௌனியாகவிட்டாள். ‘அவசரப்பட்டு என்ட மகளை விதவையாக்கி விட்டேனே’ என்ற கவலை சபேசனை வதைத்துக் கொண்டிருந்தது.

-5-
கார்த்திக் இறந்தும் ஆறுமாதம் கடந்திருந்தன. குகன் பல தடவை வனிதாவின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறி வந்திருக்கிறான். கொரோனாப் பரவலின் மூன்றாவது அலையின் இறுதிக் கட்டம். அன்று பொருட்களைக கொள்வனவு செய்வதற்காக நான்கு மணி நேரம் ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தி இருந்தனர். குகன் வனிதாவின் வீட்டுக்குச் சென்றான்.

தந்தையும் மகளும் வெளியில் சென்றிருந்தனர். “அன்ரி உங்களோட கொஞ்சம் கதைக்கணும். அங்கிளும் இருந்தா வசதியா இருந்திருக்கும். அவரும் தன்ட கருத்தைக் கூறியிருப்பார். அவசரமில்லை. வந்த பின்னர் சொல்லுங்கோ” “என்ன மகன் ஏதும் அவசரமோ? “இல்லை அன்ரி, எங்கட வீட்டில் திருமணம் செய்யச் சொல்லி எல்லோரும் பிடிவாதமாக இருக்கிறாங்க. போன தடவை இதைக் கூற வேண்டும் என்றுதான் வந்தேன். அங்கிள் இருந்ததனால் பேச முடியவில்லை”
“என்ன மகன் கதைக்கிறீங்க”

“நல்ல விசயமாத்தான். அங்கிளிடமும் வனிதாவிடமும் கதைத்து எப்படியாவது சமாதானப்படுத்தி வனிதாவை எனக்குத் திருமணம் செய்து வையுங்கோ. எங்கட வீட்டிலும் வணிதாதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்று உறுதியாக இருக்கிறாங்க. வனிதா எனக்குரியவள். என்னோடுதான் வாழவேண்டும். அவளை இந்த நிலையில்பார்க்கி என்னால் முடியவில்லை. அவளைக் காணும் போடிதல்லாம் மனதால் அழுதுவிடுகிறேன். அவள் இழந்த சந்தோசத்தை என்னால் மாத்திரம்தான் கொடுக்க முடியும். கதைச்சு நல்ல முடிவாக் கூறுங்கோ. வனிதாவ என்னோட கதைக்கச் சொல்லுங்க. உங்களை நம்பி இருக்கிறன்” என்றதும் கண் கலங்கிய சுலோச்சனா குகனின் கையைப் பிடித்து“எனக்கும் அதுதான் விருப்பம். இருவரிடமும் பேசி நல்ல முடிவாச் சொல்றன்”
எல்லோரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

வனிதா சில நாட்களில் குகனைக் காதலித்தபோது இருந்த வனிதாவாக மாறிவிட்டாள். அவளிடம் குதுகலத்தையும் சிரிப்பையும் துறும்பையும் காண முடிந்தது. குகனுடன் ஐக்கியமாகிவிட்டாள். இனி அவளுக்கு எல்லாமே குகன்தான்…..

 

 

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button