இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கு சுமந்திரன் கண்டனம்

யாழ். மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் கண்டனம் தெரிவித்தார்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களுடன் மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட பொலிஸார், அவர்களை மாவட்ட செயலகத்திற்கு வெளியே இழுத்துத் தள்ளியதுடன், ஆடைகள் கழலும் நிலையிலும் இழுத்து வெளியேற்றினர்.

குறித்த எதிர்ப்புப் போராட்டம் தொடர்பில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மாவட்ட செயலகத்தின் உள்ளிருந்தவாறே தனது கைபேசியினூடாக அவதானித்துள்ளார். அத்துடன், போராட்டம் பற்றி செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களை அமைச்சர் சந்திரசேகர் கடுமையாக வசைபாடினார்.

குறித்த சம்பவம் தொடர்பாகப் பலரும் கண்டனங்களை வெளியிட்ட நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், “நேற்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் மற்றும் தாய்மார்களை ஸ்ரீலங்கா பொலிஸார் மிக மோசமாகத் தாக்கி அப்புறப்படுத்தியதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேபோல், இந்த நிகழ்வுகளை உள்ளேயிருந்து தனது கையடக்கத் தொலைபேசியில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நீதி(?) அமைச்சரின் செயற்பாட்டையும், இந்தச் சம்பவத்தை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களைப் பொதுவெளியில் சபித்த அமைச்சர் சந்திரசேகரனின் செயலையும் கண்டிக்கிறோம்” என்றுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *