வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? அறுவடைக்கு மட்டும் ஓடிவருகிறாயே!… நியூசிலாந்து சிற்சபேசன்


இலங்கையிலே மாகாண சபை முறை “வெள்ளையானை” ஆகிவிட்டதா என்னும் கேள்வியை எளிதில் கடந்து போகமுடியவில்லை.
இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அஃது, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்படுத்தப்பட்டு நான்கு தசாப்தங்களாகின்றன.
நியூயோர்க்கில் காலைச் சாப்பாட்டு நேரம் என்பதனால், கொழும்பில் சூரியன் மறைகின்றவேளையில் காலைச்சாப்பாடு சாப்பிட முடியாதல்லவா?. அதுபோன்றதே, இனப்பிரச்சினைக்கான தீர்வை ஒன்பது மாகாணங்களிலும் அறிமுகப்படுத்தியமையாகும். அதுவே, “முதல் கோணல், முற்றும் கோணல்” என்ற கதையின் ஆரம்பப் புள்ளியாகியது.
கல்வி, சுகாதாரம், விவசாயம், மாகாணப் போக்குவரத்து, சமூக சேவைகள், உள்ளூராட்சி, மாகாண திட்டமிடல் போன்றவை மாகாணசபைகளுக்கென அடையாளப்படுத்தப்பட்டன.
13வது திருத்தத்தின் ஒன்பதாவது அட்டவணை அதிகாரப்பகிர்வை வரையறுக்கின்றது. அதன்படி, மாகாணப் பட்டியல், மத்திய பட்டியல், பொதுப் பட்டியல் என மூன்று படிநிலைகளிலே அதிகாரம் பகிரப்படுவதே ஏற்பாடாகும். ஆனால், அஃது ஏட்டுச்சுரக்காயாகும். நடைமுறைக்குப் பயன்படவில்லை. மத்திய அரசின் தலையீட்டுக்குப் பாதைவகுப்பதிலேயே கவனம் குவிக்கப்படுகின்றது.
திவிநெகும போன்ற சட்டமூலங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் படிப்படியாகக் குறைக்கப்படுகின்றன. அதனூடாக, மாகாணசபை முறையின் அத்திவாரமே தொடர்ச்சியாகப் பலவீனப்படுத்தப்படுகின்றது.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேயில்லை.

அத்துடன், போதியளவான நிதிவலு கிடையாது. மத்திய அரசின் நிதி மானியங்களையே பெரிதும் சார்ந்திருக்கின்ற வகையிலேயே அதிகாரக் கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கின்றது.
அதனால், அதிகாரப்பகிர்வு என்பது “நோஞ்சானாகவே” காணப்படுகின்றது.
இத்தகைய பின்னணியிலேயே, மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதில் எந்தவொரு ஆட்சியாளரும் அக்கறை கொள்வதில்லை.
மாகாண சபைகளின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். ஆனால், ஒரு மாமாங்கமாக மாகாணசபைத் தேர்தல் எதுவுமே நடைபெறவில்லை. கடைசியாக ஊவா மாகாணசபைக்கான தேர்தலே, 2014 செப்டெம்பரில், நடைபெற்றது. அதன்பின்னர், அடுத்தசுற்றுத் தேர்தல் 2018லிருந்து நடைபெற்றிருக்கவேண்டும். ஆனால், அதற்கு முன்னரே மாகாணசபை முறைக்கு “கால்தடம்” போடப்பட்டுவிட்டது.
தேர்தல்முறையில் மாற்றம் கொண்டுவரப்படுவதாகச் சொல்லப்பட்டது. கலப்புத்தேர்தல் முறையின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. “தஞ்சாவூர் பொம்மை” போன்று தமிழ் அரசியல்வாதிகளும் தலையாட்டிவைத்தனர்.
மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம், 2017ல், அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, பழைய விகிதாசார முறைக்குப் பதிலாக, தொகுதி மற்றும் விகிதாசாரமுறை இணைந்த கலப்புத் தேர்தல் முறை முன்வைக்கப்பட்டது.
புதிய கலப்புத் தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த, மாகாண எல்லை மறுசீரமைப்பு நடைபெறவேண்டும் என்னும் சூழல் ஏற்படுத்தப்பட்டது. சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் வகையில், எல்லை மறுசீரமைப்பு, அமையலாம் என்ற அச்சமும் பரப்பப்பட்டது.
அத்தகையவொரு சூழலிலே, புதிய தேர்தல் முறைக்கான எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதனால், தேர்தலை புதிய முறையில் நடத்த முடியாமலும், பழைய முறைக்குத் திரும்புவதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படாமலும் ஒரு சட்டச்சிக்கல் ஏற்படுத்தப்பட்டது.
ஆக, சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுவதாகப் “பேய்க்காட்டி” சட்டச் சிக்கல் உருவாக்கப்பட்டது. விளைவு. மாகாணசபை தேர்தல் சமயோசிதமாக முடக்கப்பட்டுவிட்டது.
2024 தேர்தல் விஞ்ஞாபனத்திலே, ஒரு வருடத்திற்குள் மாகாணசபை தேர்தல்களை நடாத்துவதாக தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியது. ஆட்சிப்பீடமேறி இரண்டுவருடங்கள் கடந்துவிட்டன. வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான “சிலமன்”கூடத் தெரியவில்லை. கேட்டால், வாக்குறுதி வழங்கிய “வாய்” வேறு. இப்ப அதிகாரத்தில் உள்ள “வாய்” வேறு என்ற “ரேஞ்சுக்குக்” கதைவிடுகின்றனர்.
எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையின் பின்னரே மாகாணசபை தேர்தல்களை நடத்த முடியும் என்று சொல்கின்றனர். எந்த முறையின் கீழ் தேர்தல்களை நடத்துவது என்பது குறித்து ஆராய்கின்ற பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்தை அறிந்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்கின்றனர்.
“மனமுண்டானால் இடமுண்டு” என்பார்கள்.
மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதில்லை என்பதிலும், காணி பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில்லை என்பதிலும், தென்னிலங்கை உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருகின்றமையே யதார்த்தமாகும்.
அன்றும்சரி, இன்றும்சரி அதிகாரப்பகிர்வுக்குத் தென்னிலங்கை தயாரில்லை.
அதனாலேயே, “ஒப்புக்குச் சப்பாணியாக” மாகாணசபை முறை பற்றி பேசினாலும், மாகாணசபைகளை இயங்கவிடுவதில்லை என்பதிலே கவனம் உள்ளது. ஆனால், அதனை வெளிப்படையாகச் சொல்வதில்லை. தேர்தல் முறைமை மாற்றம், எல்லை நிர்ணயச் சிக்கல் போன்ற உப்புச்சப்பில்லாத காரணங்களைச் சொல்லிக் காலங்கடத்துவதே வாடிக்கையாகும்.
பழைய விகிதாசார முறையிலே, மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதே துரிதமான தீர்வாகும். அதற்கான பிரேரணையைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய பலம் தேசிய மக்கள் சக்தியிடம் உண்டு. ஆனால், அவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாரில்லை.

ஒருபுறம், பரவலான எதிர்ப்பைக்கொண்டுள்ள, 22வது திருத்தத்தை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்தி அவசரப்படுகின்றது. மறுவளத்தில், பரவலாக எதிர்பார்க்கப்படுகின்ற, மாகாணசபை தேர்தல் தொடர்பில் கள்ளமௌனம் சாதிக்கின்றது.
ஆக, மாகாணசபை முறை தொடருமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.
இத்தகையவொரு சூழலிலேயும்கூட, ஏட்டிக்குப் போட்டியான செயற்பாடுகளுக்குத் தமிழர் தரப்பில் பஞ்சமில்லை.
“யாரோடு நோவது, யார்க்கெடுத்துரைப்பது” என்னும் துர்பாக்கிய நிலையையே காணமுடிகின்றது.
“எரிகின்ற வீட்டில் பிடுங்கினதுவரையில் லாபம்” என்பதுபோன்று, “முதலமைச்சர்” கனவிலே மிதப்பவர்களின் வரிசை நீண்டுகொண்டே போகின்றது.
வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா? அறுவடைக்கு மட்டும் ஓடிவருகிறாயே! என்று கேட்கவே தோன்றுகின்றது.
![]()