காதலனிடமிருந்து காதலியை இழுத்துச் சென்ற கரடி

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு, காதலனுடன் முகாமிட்டிருந்த 29 வயது இளம்பெண் ஒருவர், நள்ளிரவில் கூடாரத்திலிருந்து கரடியால் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் அல்டாய் மலைப்பகுதியில் (Altai Mountains) இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. ஸ்னெஜானா கொரோலியோவா (Snezhana Korolyova) என்ற அந்தப் பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் சம்பவத்திற்கு முந்தைய நாள்தான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
நள்ளிரவு 1 மணியளவில் காட்டு மிருகம் ஒன்று அவர்களின் கூடாரத்தைக் கிழித்தெறியவே, இருவரும் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்துள்ளனர். பயங்கரமாகக் கத்திய அந்தப் பெண்ணைக் கரடி இழுத்துச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுமணத் தம்பதியினரைப் போலக் கொண்டாட்டத்தில் இருக்க வேண்டிய அந்தப் பெண், பியா நதியைக் (Biya River) கடந்து சென்று உடலைப் புதைக்க முயன்ற கரடியால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த வனப்பாதுகாவலர்களும் பொலிஸாரும் வானத்தை நோக்கிச் சுட்டார்களே தவிர, அப்பகுதியில் உள்ள சுடும் கட்டுப்பாடுகள் காரணமாகக் கரடியைக் கொல்லவில்லை. கரடி பயந்து ஓடிய பின்னரே அதிகாரிகள் அந்தச் இடத்தை அடைந்து ஸ்னெஜானாவின் உடலை மீட்டுள்ளனர்.
ரஷ்யாவின் அவசரநிலை அமைச்சகத்தில் (Emergencies Ministry) ஊழியராகப் பணிபுரிந்த ஸ்னெஜானா, ஆர்டிபாஷ் கிராமத்தில் (Artybash village) உள்ள இஸ்டோக் விடுதி முகாமில் (Istok holiday campsite) தனது காதலனுடன் தங்கியிருந்த வேளையே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் சுமார் 20 கரடிகள் சுற்றித் திரிவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே இரவில் மற்றொரு பயணியின் சகோதரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும், மனிதர்களைத் தாக்கும் இந்தக் கரடி இ
ன்னும் பிடிபடாமல் சுதந்திரமாகத் திரிவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விலங்குகளுக்கான வேட்டை நாட்கள் குறைக்கப்பட்டதே கரடிகளின் எண்ணிக்கை பெருகவும், உணவுத் தட்டுப்பாடு காரணமாக அவை மனிதர்களைத் தாக்கக் காரணமாவதாகவும் வேட்டைக்காரர்கள் சங்கப் பிரதிநிதி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
![]()