கவிதைகள்

  “கரைந்து கனவாகியது” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
 மெல்பேண்    ——- அவுஸ்திரேலியா 
நீலப்பட்  டாடைக்குள் நிலவொளிந்து வருவதுபோல்
வாலைக் குமரியவள் வசந்தமென வந்துநின்றாள்
ஆலைக் கரும்பாக ஆகியதே எந்தனுள்ளம் 
ஆவலுடன் அவளழகை அலமந்து பார்த்துநின்றேன் !

 முத்தன்ன வெண்நகையை முகமலரில் பரவவிட்டு
பித்தாக்கும் வகையினிலே பெண்ணுருவாய் வந்துநின்றாள்

சொத்தாக அவள்வந்தாள் சொர்க்கமே யெனநினைத்தேன்
அத்தனைக்கும் அவ்வணங்கை ஆரெனவே நானறியேன்  ! 

சிற்றிடையாள் செம்பவள வாயுடையாள் செதுக்கிவைத்த

சிற்பமாய் அழகுடையாள் கற்றைச் சடையுடையாள்
காந்தமெனக் கண்ணுடையாள் கோலமயில் நடையுடையாள்
ஆடிவரும் தென்றலாய் அழகைச்  சுமந்துவந்தாள்   

வாழ்நாளில் தேடிய வடிவழகை நான்கண்டேன்

மனமதனில் ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடியது
தேனோடு பால்கலந்து குடிப்பதுபோல் ஓருணர்வு
தேகமெங்கும் பரவும்படி ஆகியதே அவ்வேளை   !

பிரமனது படைப்பினிலே பெரும்படைப்பு இவளாவாள்

பேரழகை பிசைந்தபடி படைத்தானோ பிரமனவன்
தலைதொட்டு கால்வரைக்கும் தனைமறந்து படைத்துவிட்டான்
அதனாலே அழகெல்லாம் ஆரணங்காய் காணுகிறேன் ! 

கம்பனது சீதை காளிதாசன் சகுந்தலை 

ரம்பையொடு திலோத்துமை அத்தனையும் கண்டேனே
செம்பவள வாயால் சிந்தாத வார்த்தையென
தாகமுடன் நானும் தவித்தேனே அவ்விடத்தில்  !

செவியைச் செவிடாக்க அலறியது சத்தம்

துள்ளி யெழுந்து துடித்து விழுந்தேனே
எழும்புகின்ற நேரத்தை இயம்பியது கடிகாரம்
நான்கண்ட அத்தனையும் கரைந்து கனவாகியது !

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button