இலங்கை

கட்டாய உழைப்பாளிகள் அடங்கலாக நாட்டில் 139,000 நவீன அடிமைகள்

கட்டாய உழைப்பாளிகள் அடங்கலான நவீன அடிமைமுறைக்கு உட்பட்டவர்கள் இலங்கையிலே கிட்டத்தட்ட 139,000 பேரளவில் உள்ளதாக 2021ஆம் ஆண்டின் Walk Free அமைப்பின் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே இலங்கையில் கட்டாயத் தொழிலாளிகளாகப் பயன்படுத்தப்படுபவர்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,

வலுக்கட்டாயமான உழைப்பை பகுதியாகவோ முழுமையாகவோ கொண்டு அகழ்ந்தெடுக்கப்படும், உற்பத்திசெய்யப்படும், அல்லது தயாரித்து முடிக்கப்படும் எந்தவொரு பொருளும் இலங்கைக்கு இறக்குமதி செய்வதை முற்றிலும் தடை செய்தல் வரவேற்புக்குரியது.

தண்டனை அல்லது மிரட்டலுக்கு உட்படுத்தப்பட்டு கட்டாயப்படுத்தி பெறப்படும் வேலை மனித உரிமை மீறலுக்குரியது என்ற வகையில், அவ்வாறானவற்றுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் எப்போதும் வரவேற்புக்குரியன.

கட்டாய உழைப்பாளிகள் அடங்கலான நவீன அடிமைமுறைக்கு உட்பட்டவர்கள் இலங்கையிலேயே கிட்டத்தட்ட 139,000 பேரளவில் உள்ளதாக 2021ஆம் ஆண்டின் Walk Free அமைப்பின் புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது.

இலங்கையில், நவீன அடிமைமுறை சார்ந்த பாதிப்பு 56% அளவில் காணப்படுகிறது. இது ஆசிய பசுபிக் பிராந்திய சராசரியை விட அதிகம். இவ்வாறான கட்டாய உழைப்பாளிகளைக் கட்டுப்படுத்தும் பதிலீட்டு நடைமுறையில் இலங்கை 50% இலும் குறைவான துலங்கலையே வெளிப்படுத்துவதாக குறித்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

மேலும், கட்டாய உழைப்பாளிகளில் உள்ள சிறுவர்களின் மோசமான முறையிலான உழைப்பு தொடர்பாக அமெரிக்க தொழில் திணைக்களத்தின் இலங்கைக்குரிய 2022ஆம் ஆண்டின் கண்டறிதலில், இலங்கையில் உள்ள சிறுவர்கள் வணிக ரீதியான பாலியல் சுரண்டல், கட்டாய வீட்டு வேலைகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உட்படுத்தப்படுவதையும் அகழ்ந்தெடுத்தல் மற்றும் கட்டுமானப் பணிகளிலும் கூட சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதையும் ஆய்வாளர்களுக்கான போதிய அளவு ஆளணி வளம் இல்லாததால் வட, கிழக்கு மாகாணங்களில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படாதிருப்பதாகவும் அறிக்கைப்படுத்துகிறது.

தீவுக்குள்ளேயே தேயிலைத் தோட்டங்களிலும், கடலோரப் பகுதிகளிலும் அகழ்வுப் பணிகளிலும் விவசாயத்துறையிலும் கட்டாயத் தொழிலாளிகளின் உழைப்பு விரவியிருக்கின்றபோது அவற்றைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போதுமான கட்டமைப்புகள் இன்றிய நிலையில், இவ்வரசாங்கம் இன்றைய விவாதப்பரப்பில் காட்டுகின்ற மனித உரிமை சார் இறக்குமதிக் கொள்கையை ஏற்றுமதியிலும் சமநேரத்தில் செயற்படுத்த உறுதி பூண வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button