22 ஆவது திருத்தம்; அஞ்சும் அளவுக்கு கறுப்பு பேய் அல்ல

அச்சமடையும் அளவுக்கு அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு பேய் அல்ல,போலியான குற்றச்சாட்டுக்கள், திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் மற்றும் சுய நலன்களால் இந்த திருத்தம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஒரு தரப்பினர் தேசிய ,சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்துள்ளார்கள். ஐ.நா. சபையில் விசேட பிரதிநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளை 27/2இல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
2025.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நீதிவான் நீதிமன்றங்களில் 753093 வழக்குகள், மாவட்ட நீதிமன்றங்களில் 263472 , மேல் நீதிமன்றங்களில் 28134 ,சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 6763 , வாணிப மேல் நீதிமன்றத்தில் 4302 , மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 5038 , உயர் நீதிமன்றத்தில் 4724 வழக்குகள் என்ற அடிப்படையில் நீதிமன்ற கட்டமைப்பில் மொத்தமாக 1065256 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு ஒரு தரப்பினர் தவறான விடயங்களை குறிப்பிட்டுள்ளனர்.மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து தீர்மானத்தின் காரணத்தை தெளிவு படுத்தினோம். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுடையதாக அமைந்தால் அதனை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டு மகாநாயக்க தேரர்கள் ஆசிர்வாதமளித்தனர்.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் ஒரு தரப்பினர் சர்வதேச அமைப்புகளுக்கும் தவறான விடயங்களையே முன்வைத்துள்ளனர். ஐ.நா. சபையில் விசேட பிரதிநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்போ, பிரான்ஸ் சட்டத்தரணிகள் சங்கமோ நீதியமைச்சுக்கு கடிதம் அனுப்பவில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுடைய வகையில் சட்டமியற்றும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு. அது இராச்சியத்தின் பொறுப்பு , அது மக்களின் அபிலாஷை.
தமக்கு எதிரான வழக்கை நீதிபதிகள் எவ்வாறு விசாரிப்பது என்று எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கும் தர்க்கம் பொருத்தமற்றது. நீதிபதிகளுக்கு எதிராக வழக்கையே குற்றஞ்சாட்டப்பட்ட நீதிபதி விசாரிக்க முடியாது.22 ஆம் திருத்தம் நீதிபதிக்கு எதிரான திருத்தம் அல்ல, அரசியலமைப்பின் 121 மற்றும் 125 பிரிவுகளுக்கு அமைய அரசியலமைப்பு மற்றும் சட்டமூலங்களை உயர்நீதிமன்றில் பொருட்கோடல் செய்ய முடியும்.அதற்கமைய அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாட்டு மக்கள் எவரும் உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தலாம். அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்மானம் முறையாக செயற்படுத்தப்படும் என்றார்.
![]()