புலிகளுக்காகவே 22 ஆவது திருத்தமாம்; சமஷ்டியையும் வழங்குமாம்

புலம்பெயர்நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பை திருப்திப்படுத்துவதற்காகவும், நாட்டை பிளவு படுத்தி சமஷ்டியாட்சி அரசியலமைப்பு முறைமையை அமுல்படுத்தவுமே அரசியலமைப்பில் 22 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிரான இந்த திருத்தத்துக்கு கடுமையான எதிர்ப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி சானக மாதுகொட தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,
அரசியலமைப்பில் 22 ஆவது திருத்தம் முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டமூலத்துக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் அரசாங்கம் அதனை கருத்திற் கொள்ளாமல், சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கையை எடுத்துள்ளது.
புலம்பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பை திருப்திப்படுத்தும் வகையில் தான் இந்த அரசாங்கம் சட்டங்களை இயற்றுகிறது.அவ்வாறான சட்டங்கள் தற்போது அமுலில் உள்ளன. பல சட்டங்களை அவ்வாறு இயற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது முற்றிலும் நாட்டுக்கு எதிரானது.
புலம்பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பை திருப்திப்படுத்துவதற்காகவும், நாட்டை பிளவு படுத்தி சமஷ்டியாட்சி அரசியலமைப்பு முறைமையை அமுல்படுத்தவுமே அரசியலமைப்பில் 22 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிரான இந்த திருத்தத்தை நாம் கடுமையாக எதிர்ப்போம் .
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு நாட்டை முன்னேற்றமடைய செய்தோம்.பொருளாதாரம் முன்னேற்றமடைந்துள்ளது என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் கூறுகின்றார்..ஆனால் பொருளாதார முன்னேற்றத்தின் பலன் நடுத்தர மக்களுக்கு கிடைக்கவில்லை.நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் வரிகள் அதிகரிக்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கின்றன.
அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரியை பேச்சுவார்த்தை ஊடாக குறைத்து விட்டோம் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் கூறுகின்றார் . இந்த வரி குறைப்புக்காக ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.
![]()