கவிதைகள்

“நல்லூரான் கொடியேற்றம் பார்த்திடுவோம் வாருங்கள்” …. கவிதை…. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
       மெல்பேண் …. அவுஸ்திரேலியா 
 
நல்லூரை நினைத்தால் நமக்கென்றும் பேரின்பம்
நல்லூரன் திருவடியை நாடிடுவார் தேறிடுவார்
பொல்லா வினைகள் சொல்லாமல் ஓடிவிடும்
எல்லாமே தந்திடுவான் நல்லைநகர் நாயகனே 
 
நல்லூரான் கொடியேற்றம் எல்லையில்லா ஆனந்தம்
கந்தனது கொடிபார்க்க வந்திடுவார் அடியார்கள்
வேதமொடு நாதம் மிகுசைவத் திருமுறைகள் 
விண்ணுலகம் கேட்டிடவே வேலவனின் கொடியேறும்
 
அரோகரா எனுமொலியோ அவனையெலாம் ஒலிக்கும்
அடியார்கள் தமைமறந்து கொடியேற்றம் கண்டிடுவார்
கொடியேற்றம் காணாமல் தவிக்கின்ற அடியவர்க்குத்
தொலைக்காட்சி ஊடகம் சுகமாகக்  காட்டிவிடும்
 
தூரவே இருந்தாலும் தொலைக்காட்சி காட்டுவதை
தூய மனத்தோடு எழுந்துமே பார்த்திடுவார் 
கொடியேறும் காட்சியிலே கைகுவித்து நின்றிடுவார்
நல்லூரில் நிற்பதாய் நம்பியே கைதொழுவார்
 
நல்லூரை நம்பினால் நல்லனவே வந்தடையும்
நல்லூரை நம்பினால் நம்மனமும் தெளிந்துவிடும்
நல்லூரை நம்பினால் நாளெல்லாம் சிறப்பாகும்
நல்லூரை நம்புவோம் நல்லூரான் கைகொடுப்பான் 
 
கொடியேற்றம் கண்டுவிட்டால் கொடுவினைகள் போகுமென
நம்பிநிற்கும் அடையார்கள் நாட்டிலே பலருள்ளார்
நம்பிடுவார் உள்ளத்தை நாடிடுவான் நல்லூரான்
நல்லூரான் கொடியேற்றம் பார்த்திடுவோம் வாருங்கள்  !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button