யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்றுடன் (15) 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
இந்நிலையில், தங்களை உடனடியாகச் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவ நடவடிக்கையினால் தங்களின் பூர்வீக மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், அகதிகளாகியுள்ள இப்பகுதி மக்களை இன்னமும் அவர்களின் சொந்த நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்காது, மக்களின் வளமான காணிகளை இராணுவத்தினர் தொடர்ந்தும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.
இந்தநிலையில், மக்களின் பூர்வீகக் காணிகளில் இருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றி, தங்களைச் சொந்த இடங்களில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழு அறிவித்துள்ளது.
தங்களின் வாழ்வாதார உரிமைக்கான இந்த நியாயமான போராட்டத்துக்கு எவ்வித கட்சிப் பேதங்களுமின்றி, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரும், அரசியல் தலைமைகளும், பொதுமக்களும் முழுமையான ஆதரவை வழங்கிப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, யாழ். மாவட்ட செயலகப் போராட்டத்துக்கு இணையாக, வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலய எல்லையான பலாலி சந்திப் பகுதியிலும் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மற்றுமொரு கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()