இலங்கை

சுரேஸ் சலே தொடர்பில் யார் கூறுவது உண்மை?

3 முஸ்லிம் நபர்களை நீர்கொழும்பு தேவாலயங்களுக்கு அனுப்பி சுரேஷ் சலே உளவு பார்த்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த சபையில் தெரிவித்தார். ஆனால் அக்காலப்பகுதியில் சுரேஸ் சலே இலங்கையிலேயே இல்லை என நீதியரசர் (ஓய்வுநிலை) இமாம் தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட எம்.பி. சானக மாதுகொட தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள், குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஸ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படவில்லை. அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் தெரிவித்தார் . ஆனால் சுரேஸ் சலே தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள மருத்துவ அறிக்கையில்,அவர் சித்திரவதைக்கும், உளவியல் அழுத்தத்துக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் யார் கூறுவது உண்மை?

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு 3வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மூவரை சுரேஸ் சலே, நீர்கொழும்பு பகுதி தேவாலயங்களுக்கு அனுப்பி உளவு பார்த்து பல விடயங்களை பெற்றுக்கொண்டதாக விசாரணைகளில் வெளிவந்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த சபையில் தெரிவித்தார். அக்காலப்பகுதியில் சுரேஸ் சலே இலங்கையில் இல்லை. வெளிநாட்டில் இருந்ததாக நீதியரசர் (ஓய்வுநிலை) இமாம் தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் விசாரணைகள் தொடர்ந்தால் அது குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களை அவமதிப்பதாக அமையும்.

சுயாதீன விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி விசாரணைகளை முன்னெடுக்க கூடாது என்றே குறிப்பிடுகிறோம். நாட்டுக்காக சேவையாற்றிய சுரேஸ் சலேக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றோம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button