இலங்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரியிடம் தமிழரசு எம்.பி. சாணக்கியன் நேரில் முறையீடு!

இலங்கையில் தமிழ் சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் நேரில் முறையிட்டுள்ளார்.

ஐரோப்பிய வெளிநாட்டு நடவடிக்கை சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவரான சார்ல்ஸ் வைட்லியை, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தகச் சலுகை போன்ற விடயங்களில் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சார்ல்ஸ் வைட்லியுடனான இந்தச் சந்திப்பின் போது, தமிழ் சொல்லிசைப் பாடகரான கணேஷ்குமார் சங்கீத்ஷன் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கை கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் செயல் என்று சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் எழுதிய கடிதத்தையும் சார்ல்ஸ் வைட்லியுடன் கையளித்துள்ளார்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக சர்வதேசத்துக்கு உறுதியளித்த போதிலும், குறிப்பாக தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக இந்தச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதை இதன்போது சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய கைதுகள், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தகச் சலுகைக்கான சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளை இலங்கை மீறுவதையே காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக நடத்தப்படாமல் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள சாணக்கியன், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வும் ஜனநாயக பிரதிநிதித்துவமும் அத்தியாவசியமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எதிர்கால அரசமைப்புச் சீர்திருத்தங்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தமிழர் பெரும்பான்மைப் பகுதிகளில் தொடர்ந்தும் நிலவி வரும் காணி ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

கணிசமான அளவிலான தமிழ் மக்களின் காணிகள் இன்னும் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்துக்காக அவை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது அன்புக்குரியவர்களைத் தேடி, நீதி கோரிப் போராடி வரும் குடும்பங்களின் நிலை குறித்து விவரித்துள்ள சாணக்கியன், சர்வதேச தரத்துக்கு அமைவான நம்பகமான உண்மையறியும் செயல்முறை மூலம் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல், மனித உரிமை மற்றும் சமூக நீதி சார்ந்த கோரிக்கைகளில் சர்வதேச சமூகமும், ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்தச் சந்திப்பின் போது சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button