குமரனது அருளாலே குமரகுருபரர் எழுந்தார்!… கவிதை…. ஜெயராம்சர்மா

ஐந்து வயதாகியும் அம்மாவென் றழைக்காமல்
வாய்பேச முடியாது அப்பிள்ளை இருந்தது
பெற்றவர்கள் வருந்தினார் பெருந்துயர மெய்தினார்
உற்றதுணை முருகனென உளமுருகி வேண்டினார்
பேசாத பிள்ளையினை தீராதா கவலையுடன்
திருமுருகன் கோவிலுக்குக் கூட்டியே போனார்கள்
திருமுருகன் சன்னதியில் அழுதவரும் வேண்டினார்
திருமுருகன் அருளாலே வாய்திறந்தார் அப்பிள்ளை
பேசாத பிள்ளை பெரும்பொருளைப் பாடினார்
கந்தர்கலி வெண்பா கவிமலராய் மலர்ந்தது
நொந்தவர்கள் மகிழ்ந்தார்கள் நூறுமுறை தொழுதார்கள்
கந்தனது கருணையினால் கவிதைமழை கொட்டியது
குமரனது அருளாலே குமரகுருபரர் எழுந்தார்
எழுந்தவர் இருக்காமல் எங்கெல்லாம் நடந்தார்
இல்லறத்தை துறந்தார் இறைவழியைப் பற்றினார்
இலக்கியத்தில் தத்துவத்தை இங்கிதமாய் நிறைத்தார்
பிள்ளைத் தமிழ்பாடினார் கலம்பகமும் பாடினார்
மும்மணிக் கோவையுடன் நான்மணி மாலையும்பாடினார்
நீதிநெறி விளக்கத்தை மேதினிக்கு ஈந்தார்
சகலகலா வல்லிமாலையினால் சரஸ்வதியைப் போற்றினார்

மூன்றுவயதுப் பாலகன் முதல்வனைப் பாடினான்
ஐந்துவயதுப் பாலகன் ஆறுமுகத்தானை பாடினான்
பாடுதற்கு ஞானம் எப்படித்தான் வந்ததுவே
பாமரர்கள் நாமறியோம் பராபரமே அறியும்
குருபரா என்று குமரவேள் அழைத்தார்
குமரகுரு பரராகி குவலயத்தில் ஒளிர்ந்தார்
அறிவோடு ஞானத்தை அளித்திட்டார் குமரன்
அதனாலே தத்துவத்தை அள்ளியே கொடுத்தார்
சைவத்தைத் தலைமீது வைத்துமே சுமந்தார்
தமிழறியா இடத்தினிலே சைவத்தை விதைத்தார்
மடமமைத்து மடமையினைப் போக்கிடவே முயன்றார்
மன்னரடி பணிந்தார் மனம்மாறி உதவினார்
காசியிலே மடம் திருப்பனந்தாள் மடம்
ஆசியாய் அமைந்தது அருட்குமரன் அருளாலே
குமரகுரு பரராலே அமைந்திட்ட மடமனைத்தும்
நமதுசைவச் சொத்தாகி நம்சைவம் காக்கிறது !

மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()