இலங்கை

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்குப் பிணை!; சாவகச்சேரி நீதிமன்றம் வழங்கியது 

சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனைப் பிணையில் செல்லச் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (12) அனுமதி வழங்கியுள்ளது.

யாழ்.சாவகச்சேரிப் பகுதியிலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில் பாடலைப் பாடி அந்தப் பாடலுக்குத் தனது இசை சேர்க்கையில் உருவான சொல்லிசைப் பாடலை இணைத்துச் சமூக ஊடகங்களில் கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைக் கலைஞன் பகிர்ந்திருந்தார்.

இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த 2 ஆம் திகதி அந்த இளைஞனைக் கைது செய்து விசாரணைகளின் பின் மறுநாள் 3 ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியதையடுத்து இளைஞனை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

இந் நிலையில் , அவரை விடுதலை செய்யுமாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறான நிலையில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளைப் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அல்லாது தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு- 120 இன் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்குப் பணித்திருந்தார்.

இதனைடுத்துச் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து இளைஞன் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் மன்றுக்குக் கிடைக்காத காரணத்தால் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனினும், மீண்டும் நகர்த்தல் பத்திரம் ஊடாக மீண்டும் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில்,வெள்ளிக்கிழமை அவரைப் பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button