இலங்கை

சஹ்ரானின் பின்னணியில் இருந்த முக்கிய நபர்கள்! உண்மையைக் கண்டறியும் பொறுப்பு அநுர தரப்பிடம்..

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களின் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதாகத் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில், தற்போதைய அரசு முழுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாகக் கொழும்பில் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டமை குறித்து ஊடகங்களிடம் நேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசு இந்த விசாரணை விவகாரத்தை சரியான முறையில் கையாண்டு வருகின்றதா என்பதை எதிர்க்கட்சி என்ற ரீதியில் தாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சஹ்ரானின் குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு உதவியாக இருந்தவர்கள் பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

எனவே, தற்போதைய அரசின் கீழ் இந்தச் சம்பவம் குறித்து முறையான, ஆழமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இதன் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை முழுமையாகக் கண்டறியப்பட வேண்டும்.

சஹ்ரானுக்கு இத்தகைய பாரிய அழிவை ஏற்படுத்துவதற்குப் பின்னணியாக இருந்துவிட்டு, தற்போது வெளியில் நடமாடும் நபர்களுக்கு தகுந்த தண்டனையைப் பெற்றுக்கொடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தால் முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி, தனிப்பட்ட ரீதியில் தானும் பாதிக்கப்பட்டேன்.

சுரேஷ் சலே உள்ளிட்டோருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேநேரம், சுரேஷ் சலேவுக்கு எதிராக எதிர்க்கட்சிக் கூட்டணி என்ற ரீதியில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைப் பகிரங்கமாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

எங்களது கட்சி அத்தகைய அரசியல் ரீதியான போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் சிங்களவரா, முஸ்லிமா, தமிழரா அல்லது கிறிஸ்தவரா என்பது எங்களுக்கு முக்கியமல்ல.

சம்பவத்துடன் தொடர்புடைய தகவல் அல்லது சான்றுகள் இருந்தால், எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்டத்தின் மூலம் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு” என குறிப்பிட்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button