இலங்கை

சொல்லிசை கலைஞனை பிணையில் விடுவிக்க கோரி மேல் நீதிமன்றில் வழக்கு

கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை  நடைபெற்றது.

அதன் போது சொல்லிசை கலைஞன் சார்பாக மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி கேசவன் சயந்தன் , சொல்லிசை கலைஞனை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சாவகச்சேரி பொலிஸார் முற்படுத்தும் போது தாக்கல் செய்த டீ அறிக்கையில் உள்ள சில சட்ட முரணான விடயங்கள் சிலதை குறிப்பிட்டு , கலைஞனுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுவதாகும் , அது பாரதூரமான நீதி புரள்வு என மன்றில் சட்டத்தரணி தனது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டார்.

அத்துடன் எதிர்மனு தாரர்களான ,சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , யாழ் மாவட்ட குற்ற விசாரணை பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்புவதனை இயன்ற விரைவில் அனுப்புமாறும் , அறிவித்தல் திரும்பும் திகதியை நாளைய தினமாக குறிப்பிட வேண்டும் எனவும் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அந்நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதியை அறிவித்தல் திரும்பும் திக்தியாக மன்று குறிப்பிட்டு அந்த திகதிக்கு வழக்கினை ஒத்தி வைத்துள்ளது.

அதேவேளை சொல்லிசை கலைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

அத்துடன் சொல்லிசை கலைஞனின் கைது அடிப்படை உரிமை மீறல் என உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு நாளைய தினம் அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button