பலதும் பத்தும்

சிரிப்புக்கு பின்னால் ஒளிந்திருந்த ‘கல்’ சதி

நவீன காலத்தில் சந்தைகள் எவ்வளவோ முன்னேறினாலும், கிராமப்புறங்களில் இன்றும் மோட்டார் சைக்கிளில் மீன் விற்பனை செய்யும் முறை மாறவில்லை. ஆனால், அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றிய ஒரு கில்லாடி மீன் வியாபாரி குறித்த தகவல் நாவுல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒரு குக்கிராமத்தில் இருந்து கிடைத்துள்ளது.

வழக்கமாக அந்த கிராமத்திற்கு வரும் மீன் வியாபாரி, மீன்களை வெட்டிக் கொடுத்துவிட்டு, எடையை விட சற்று கூடுதல் காசைப் பெற்றுக்கொள்வது வழக்கம். ஆனால், அன்று அவர் தனது ‘வேலையைக்’ காட்டியுள்ளார்.

வழக்கமாக மீன் வாங்கும் ஒரு பெண்மணி, இன்றும் மீன் கேட்டுள்ளார். அந்த வியாபாரியோ சிரித்த முகத்துடன், “அக்கா, இன்று ஆத்து மீன் கொண்டு வந்திருக்கிறேன், நல்ல பிரஷ்ஷான மீன்கள்! ஆனால், இன்று எனக்கு கொஞ்சம் அவசரம், மீனை வெட்டிக் கொடுக்க நேரமில்லை. நீங்களே வெட்டிக் கொள்கிறீர்களா?” எனக் கேட்டுள்ளார்.

அந்தப் பெண்ணும் எதையும் யோசிக்காமல் மீனை வாங்கிப் பணம் கொடுத்துள்ளார். வியாபாரி கிளம்பிய பிறகு, வீட்டுக்குள் சென்று மீனை வெட்டியபோது அந்தப் பெண்ணிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது!

மீனின் வயிற்றுக்குள் பெரிய பெரிய கற்கள் இருந்தன. எடையை அதிகரிப்பதற்காக, மீனின் வாய் வழியாக மிக நுணுக்கமாக கற்களை வியாபாரி உள்ளே தள்ளியது அப்போதுதான் அந்தப் பெண்ணிற்குப் புரிந்தது.

அன்று ஊரில் பலரும் மீன் வாங்கியிருந்தாலும், ஒரு சிலரே இந்த மோசடியைக் கண்டுபிடித்து வெளியே சொன்னார்கள். விஷயம் ஊர் முழுவதும் பரவியதும், அந்த வியாபாரி தப்பித்துச் சென்றுவிட்டார். அவர் அந்த கிராமத்திற்கு வந்து நீண்ட காலம் ஆவதாகவும், இப்போது மீண்டும் வந்து கைவரிசையைக் காட்டிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *