இலங்கை

ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசியல் நிகழ்ச்சி நிரல் நாட்டை பிளவுபடுத்துகிறது: நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் நாட்டின் இனங்களுக்கு இடையே தேவையற்ற விரிசலை ஏற்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதியின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் பௌத்த மக்கள் நாகதீபத்திற்குச் சென்று வழிபாடு செய்ய முடியாத நிலையும், அதேபோல் யாழ்ப்பாண மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தெற்கிற்கு வர முடியாத சூழலும் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது ஜனாதிபதியின் தற்போதைய அரசியல் கொள்கையின் ஒரு வெளிப்பாடு என விமர்சித்த அவர், ஜனாதிபதி அநுரகுமார இதற்கு முன்னர் அரசியல் கட்சிகள், அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது பரப்பிய அதே வெறுப்புணர்வை இப்போது இனங்களுக்கு இடையிலும் பரப்ப முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்திற்குச் சென்று மக்களுக்குச் சொல்வதற்குப் புதிய விடயங்கள் ஏதும் இல்லையெனில், குறைந்தபட்சம் தமிழ் மக்களின் கலாச்சாரத்தையாவது பாதுகாத்து முன்னோக்கிச் செல்லும் ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும், காலாவதியான இத்தகைய அரசியல் முறைகளைத் ஜனாதிபதி மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *