இலங்கை

கந்தரோடை விகாரை பெயர்ப் பலகை அகற்றல் : வலி.தெற்குப் பிரதேச சபைத் தவிசாளரிடம் விசாரணை

யாழ்ப்பாணம் கந்தரோடை விகாரை எனப் பெயரிடப்பட்ட அனுமதியற்ற சட்டவிரோதப் பெயர்ப் பலகையை அகற்றிய விவகாரம் தொடர்பாக வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா பிரகாஷிடம் நேற்றுத் திங்கட்கிழமை சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பொதுச் சந்தைக்கு அருகில் தனியார் காப்புறுதி நிறுவனமொன்றால் கந்தரோடை விகாரை எனத் திசை காட்டும் பெயர்ப் பலகை நாட்டப்பட்டிருந்தது. இந் நிலையில் கந்தரோடை விகாரைகள் அமையப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் புராதன இடத்தினைத் தொல்லியல் ஆய்வு மையம் என அடையாளப்படுத்தப்பட வேண்டுமென வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து வீதிகளில் கந்தரோடை விகாரை எனத் திசைகாட்டும் பெயர்ப் பலகைகளை அகற்றும் செயற்பாட்டை வலிகாமம் தெற்குப் பிரதேச சபை ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் சுன்னாகத்தில் கந்தரோடை விகாரை எனப் பெயர் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகை இந்த மாதம் 8 ஆம் திகதி அகற்றப்பட்டிருந்தது. இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் மின் அஞ்சல் மூலம் சுன்னாகம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சுன்னாகம் பொலிஸார் சுன்னாகத்திலுள்ள வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துக்கு நேற்றைய தினம் நேரடியாகச் சென்று பிரதேச சபையின் தவிசாளர் பிரகாஷிடம் விசாரணைகள் மேற்கொண்டனர்.

இதன்போது அகற்றப்பட்ட பெயர்ப் பலகையையும் பொலிஸார் பார்வையிட்டுள்ளனர். பெயர்ப் பலகையை அகற்றிய வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் பணியாளர்களில் ஒருவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென சுன்னாகம் பொலிஸார் கேட்டுக் கொண்டனர். எனினும், அதற்கு வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் மறுப்புத் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *