யாழ்ப்பாணத்தில் கூறிய கருத்து ஜனாதிபதி மன்னிப்பு கோர வேண்டும்

பௌத்தர்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கூறிய கருத்து தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று சர்வஜன பலய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
பௌர்ணமி தினங்களில் ஶ்ரீமகா போதி உள்ளிட்ட பௌத்த விகாரைகளையும் கடந்து தெற்கில் இருந்து யாழ்ப்பாணம் வருபவர்கள் சில் வழிபாட்டுக்காக அன்றி குரோத நோக்கத்துடனேயே வருகின்றனர் என்று யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கூறியிருந்த நிலையில், அது தொடர்பில் தொம்பே கபுகொட, ஹிரிதொட புராண விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே திலித் ஜயவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது திலித் ஜயவீர எம்.பி மேலும தெரிவித்துள்ளதாவது,
அரசியல்வாதியொருவர் எமது பிக்குகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து கருத்துக்களை கூறியுள்ளார். அவருக்கு எமது பிக்குகள் தொடர்பில் என்ன தெரியும். அவர்கள் எவ்வளவு அர்ப்பணிப்புகளை செய்கின்றார்கள் என்பது பற்றி தெரியுமா? ருவான்வெலிசாய மற்றும் ஶ்ரீமகா போதியை கடந்து நாகதீபத்திற்கு செல்வதானது குரோதத்துடன் அல்ல, அன்புடனேயே ஆகும். வடக்கிற்கு அன்பே கொண்டு செல்லப்படுகின்றது.
இவ்வாறு விமர்சனம் செய்யும் அனைவரும் யாழ். தேவி ரயிலில் ஏறிப்பாருங்கள். அதில் எமது மக்கள் யாழ்ப்பாண மக்களுடன் அன்புடன் உணவுகளை பகிர்ந்துகொண்டு பயணிக்கின்றனர் என்று பாருங்கள். பிறப்பில் எவரும் சிங்களவர், தமிழர் என்று வேறுபடுவதில்லை. அன்பையே எமது மதம் போதிக்கின்றது. இது குரோதத்தை போதிக்கவில்லை.
இந்நிலையில் அவர் இவ்வாறான மூர்க்கத்தனமான கருத்துக்களை உடனடியாக நீக்கிக்கொள்ள வேண்டும். இது இனவாத கருத்தே. இதனை மீளப்பெற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரி, நாட்டுக்கு கூறும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது. இதன்படி அவர் செயற்படுவார் என்று நம்புகின்றோம் என்று கூறியுள்ளார்.
![]()