தெற்கிலிருந்து குரோதத்துடன் யாழ் வருபவர்கள் போன்று யாழில் விகாரையை சுற்றி வளைக்கும் இனவாதிகள்!

பௌர்ணமி தினங்களில் ஶ்ரீமகா போதி உள்ளிட்ட பௌத்த விகாரைகளையும் கடந்து தெற்கில் இருந்து யாழ்ப்பாணம் வருபவர்கள் சில் வழிபாட்டுக்காக அன்றி குரோத நோக்கத்துடனேயே வருகின்றனர் என்றும், அதேபோன்று யாழ்ப்பாணத்தில் விகாரையை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களும் இனவாத நோக்கத்தை கொண்டவர்களே என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழுநாடும் ஒன்றாக வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் மீண்டும் ஒருபோதும் இனவாத முறுகலுக்கு போகாத, தேசிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனான நாட்டை நாங்கள் அமைப்போம். எந்தவொரு இடத்திலும் எந்த வகையிலான இனவாதத்திற்கும் மீண்டும் தலைதூக்க இடமளிக்கமாட்டோம்.
ஆனால் சில இடங்களில் இனவாத சம்பவங்கள் நடக்கின்றன. மத வழிபாட்டு இடத்தை அடிப்படையாகக் கொண்டு முறுகல்கள் காணப்படுகின்றன. குறிப்பாக பௌர்ணமி தினத்தில் சில் எடுப்பவர்கள் ஶ்ரீமகா போதியையும் கடந்து யாழ்ப்பாணம் வருகின்றனர். இந்த இடத்தில் சில் அல்ல குரோதமே காணப்படுகின்றது. இல்லையென்றால் விகாரைகள், வழிபாட்டு இடங்கள் பலவற்றை கடந்து யாழ்ப்பாணத்திற்கு வருவது எதற்காக? சில் எடுப்பதற்காக அல்ல. குரோதத்திற்காகவே ஆகும்.
அதேபோன்று ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் விகாரையை சுற்றி வளைக்கின்றனர். இது காணிக்காக அல்ல, இனவாதத்திற்காகவே ஆகும். நான் எமது புலானாய்வு பிரிவினரிடம் ஒவ்வொரு பௌர்ணமியிலும் அந்த இடத்தில் கூச்சலிடும் எவருடையதேனும் காணி இருக்கின்றதா? என்று தேடிப்பார்க்குமாறு கோரினேன். ஆனால் அதிகாரத்தை இழந்த இனவாத சக்திகள் சிறுசிறு இடங்களில் மீண்டும் இனவாதத்தை தலைதூக்கச் செய்ய முயற்சிக்கின்றனர். இவை எதற்கும் நாங்கள் இடமளிக்க மாட்டோம்.
எமக்கு மக்கள் சண்டை பிடிக்கும் நாடு அவசியமில்லை. நல்லிணகத்துடன், மற்றையவர்களை சந்தேகத்துடன் பார்க்காத, அன்பாக பழகக்கூடியவரக்ளை கொண்ட நாட்டை உருவாக்குவதே தேவையாக உள்ளது. நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதிக்கச் செய்வதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் .
மேலும் நாட்டில் வியாபித்திருக்கும் போதைப் பொருளை ஒழிக்கும் விசேட வேலைத் திட்டத்திற்காக நாங்கள் இன்று ஒன்றிணைந்திருக்கின்றோம்.சக்தி மிக்கதும், பலமானதுமான ஒரு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டி எமது அரசாங்கம் தீவிரமாக வேலை செய்து வருகின்றது.
எமது நாட்டில் இருக்கும் பெற்றோர்களுக்கு தங்களுடைய பிள்ளைகள் தொடர்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் இந்த விஷப் போதைப்பொருளால் அந்தக் கனவுகள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன.
இந்தப் போதைப் பொருள் வர்த்தகத்தினால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு இந்த அரசாங்கத்தை வீழ்த்த நினைக்கின்றார்கள். அது எங்களுக்கு தெரியும். கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்குள்ளே இருக்கும் கைதிகள் போதைப்பொருள் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
போதைப்பொருளை ஒழிக்கும் திட்டத்தில் எமது பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும், ஒரு சில பொலிஸார் இதற்கு விதி விலக்காக போதைப் பொருள் வர்த்தகர்களுடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
![]()