2300 கால பௌத்த வரலாற்றில் அநுர ஆட்சியிலேயே புத்த பெருமான் கைது

2300 கால பௌத்த வரலாற்றில் அநுர ஆட்சியிலேயே முதற்தடவையாக புத்த பெருமான் கைது செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது என்று பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை கரையோர பாதுகாப்பு வலயத்திற்குள் அரச பதிவுடைய விகாரையில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்ட விடயம் தொடர்பில் நான்கு பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பொங்கல் சாப்பிடுவதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு செல்லும் போது எமது பிக்குககள் சிறை சோற்றையே உண்ண வேண்டியிருந்தது. பலாங்கொட கஸ்லப தேரர் உண்ணாவிரதத்தில் இருந்தமையினால் அவருக்கு சிறை சோற்றையும் சாப்பிட முடியாமல் போனது. இவ்வாறு ஏன் நடக்கின்றது. இது பௌத்த விரோத அரசாங்கமாகும். 2300 சாசன வருட வரலாற்றில் புத்த பெருமான் கைது செய்யப்படும் சம்பவம் முதல்தடவையாக அநுர ஆட்சியிலேயே பதிவாகியுள்ளது. ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர் காலத்தில்கூட புத்தர் சிலை கைது செய்யப்படவில்லை. பௌத்தர்கள் புத்தர் சிலையொன்றை உயிருள்ள புத்தப் பெருமானாகவே பார்க்கின்றனர். புத்த பெருமானை வழிபடுவதாக நினைத்தே புத்தர் சிலையை மக்கள் வணங்குகின்றனர். இதனால் புத்தர் சிலையொன்றை கைது செய்தால் அது புத்த பெருமானை கைது செய்வதை போன்றது.
இந்த புத்தர் சிலையானது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விகாரையொன்றிலேயே வைக்கப்பட்டுள்ளது. இங்கேயே இதனை செய்ய முடியாது என்றால் அதனை எங்கே வைப்பது. குறிப்பாக கரையோர பாதுகாப்பு வலயத்திற்குள் ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள், சிற்றுண்டிசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள பிக்குகள் சுட்டிக்காட்டும் வகையில், வேறு மத வழிபாட்டிடங்கள் இந்த கரையோர பாதுகாப்பு வலயத்தில் உள்ளன. இவை எதுவும் அரசாங்கத்திற்கு தெரியவில்லை. இந்த புத்தர் சிலை மட்டுமே தெரிகின்றது. அரசாங்கம் சட்டத்தை சரியாகவும், சமமாகவும் பயன்படுத்த வேண்டும். ஆனால் பெளத்த மதத்தை அழிப்பதற்காக அரசாங்கம் சட்டத்தை பயன்படுத்துவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றார்.
![]()