இலங்கை

அம்பிட்டிய தேரரை இதுவரை கைது செய்யாதது ஏன்?; 15 க்கு முன் கைது செய்யுமாறும் நீதவான் உத்தரவு

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என் கூறிய அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 15 திகதிக்கு முன்னர் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (8) பொலிசாருக்கு உத்தரவிட்டதுடன் இதுவரை ஏன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வில்லை என்பது குறித்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டார்.

கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது, வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த தேரர் தெரிவித்த வன்முறையான இந்தக் கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள (International Covenant on Civil and Political Rights ) சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம், அந்தத் தேரரை கைது செய்யுமாறு அறுவுறுத்தல் வழங்கியது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை (08) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது அந்தத் தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு தொடுநர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுரையின் படி தேரர் இதுவரை கைது செய்யப்படவில்லை என நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்தார்

இதனையடுத்து நீதவான், அடுத்த வழக்குத் தவணையான எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் அந்தத் தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டதுடன் தேரரை இதுவரை நீதிமன்றில் ஏன் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கட்டளையிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *