முச்சந்தி

யாழ் மருத்துவமனை படுகொலை; 38ஆண்டின் பின்னர் நீதி கிடைக்குமா?… நவீனன்

(1989 ஆகஸ்ட் வல்வை படுகொலைகளுக்காக 450 கோடி இழப்பீடாக இந்தியா வழங்க வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயல்திட்டம் பரிந்துரை செய்துள்ளது. ஆனாலும் யாழ் மருத்துவமனை படுகொலைகளுக்காக இந்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே வேதனையான உண்மையாகும்)

யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள் (Jaffna hospital massacre) ஈழப்போரின் போது 1987 அக்டோபர் 21இல் இடம்பெற்ற கொடூரமான நிகழ்வாகும்.இந்த கோரமான படுகொலை நிகழ்ந்து, 38ஆண்டுகளின் பின்னர் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே.

1989 ஆகஸ்ட் வல்வை படுகொலைகளுக்காக 450 கோடி இழப்பீடாக இந்தியா வழங்க வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயல்திட்டம் பரிந்துரை செய்துள்ளது. ஆனாலும் யாழ் மருத்துவமனை படுகொலைகளுக்காக இந்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே வேதனையான உண்மையாகும்,

1987இல் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் நுழைந்த இந்திய அமைதிப் படை இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள், மற்றும் பணியாளர்கள் 90 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

மனித உரிமைக் அமைப்புக்கள் இந்த படுகொலைகளை இனப்படுகொலை எனக் கூறியுள்ளன. அதே நேரத்தில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளில் இடையில் அகப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என இந்திய இராணுவத்துக்குப் பொறுப்பான லெப். ஜெனரல் தெபிந்தர் சிங் தெரிவித்திருந்தார்.

யாழ் மருத்துவமனை படுகொலை:

யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை வட மாகாணத்தில் மக்கள் அடர்ந்து வாழும் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு அடிப்படை மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் ஒரேயொரு மருத்துவமனை ஆகும்.

போர்க்காலங்களில் இப்பகுதி போரில் ஈடுபடுபவர்கள் அணுகாத வண்ணம் பாதுகாக்கப்பட்ட ஒரு மருத்துவமனையாக இயங்கி வந்தது. 1987 அக்டோபர் 21 தீபாவளி விடுமுறை நாளாகும். அன்றும் முதல் நாட்களிலும் குடாநாட்டின் பல்வேறு பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற இந்திய இராணுவத்தினரின் ஏவுகணை வீச்சுகளில் இறந்த 70 இற்கும் அதிகமான பொதுமக்களின் இறந்த உடல்கள் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, யாழ் நகரை இந்திய இராணுவம் கைப்பற்றும் என்ற அச்சம் நிலவியது. இதனால் மருத்துவமனையின் ஊழியர்கள் சிலர் அச்சத்தில் பணிக்குச் செல்லத் தயக்கமடைந்த நிலையிலும் பலர் தமது கடமைகளுக்குச் சென்றிருந்தனர்.

அக்டோபர் 21, 1987 காலையில் யாழ் கோட்டைப் பகுதியில் இருந்து மருத்துவமனைப் பகுதியை நோக்கி பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களும், உலங்கு வானூர்திகளில் இருந்து குண்டுத் தாக்க்குதல்களும் நடாத்தப்பட்டன.

அன்று மாலை இந்திய இராணுவத்தினர் மருத்துவமனையின் முன்பக்கமாக உள்ளே வந்தனர். நடைபாதை வழியாக உள்ளே வந்த அவர்கள் அங்கிருந்த அனைவரையும் உள்ளே செல்லுமாறு பணித்தனர். அதன் பின்னர் மேற்பார்வையாளரின் அலுவலகத்தினுள்ளும் ஏனைய அறைகளுள்ளும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என நேரில் கண்டவர்களின் கூற்றுப் படி, பல பணியாளர்கள் இறந்து வீழ்ந்தனர்.

இவர்களில் மேற்பார்வையாளர், மற்றும் முதலுதவி வண்டி சாரதியும் அடங்குவர். ஒரு படையினன் பணியாளர் ஒருவரை நோக்கி கிரனேட்டு எறிந்ததில் பலர் கொல்லப்பட்டனர். இன்னும் ஒருவரின் கூற்றுப் படி, இந்திய இராணுவத்தினர் ஊடுகதிரியல் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றனர்.

அதேவேளை எட்டாம் இலக்க வார்டில் இருந்து நோயாளிகள் பலர் இங்கு பாதுகாப்புக்காக தங்கியிருந்தனர். இறந்து விட்டதாகத் தரையில் படுத்திருந்த சிலர் உயிர் தப்பினர்.
இரவு முழுவதும் துபாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சுகளும் இடம்பெற்றன என நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த நாள் அக்டோபர் 22, 1987 காலையில் மருத்துவர் சிவபாதசுந்தரம் மேலும் மூன்று தாதிகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். அவர்கள் தமது கைகளை மேலே தூக்கியவாறு “நாம் சாதாரண மருத்துவர்களும் தாதிகளும். நாம் சரணடைகிறோம்,” எனக் கத்தியபடி சென்றனர். அவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. மருத்துவர் சிவபாதசுந்தரம் அங்கே கொல்லப்பட்டார், தாதிகள் மூவரும் கடும் காயங்களுக்குள்ளானார்கள்.

இதன்பின் 1100 மணியளவில் இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் வார்டு ஒன்றினுள் நுழைந்தார். ஒரு பெண் மருத்தவர் எதிரில் எதிர்ப்பட்டார். அவர் இராணுவ அதிகாரிக்கு நிலைமையை விளக்கிய பின்னர் அவர் ஏனைய பணியாளர்களை கைகளைத் தூக்கியவாறு வெளியேறி வருமாறு கூறினார். அங்கு உயிருடன் இருந்த 10 பேர் வெளியேறினர். வெளியேறும் போது அவர்கள் மருத்துவர் கணேசரத்தினம் இறந்து கிடப்பதைக் கண்டனர். அன்று மாலை இறந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் சேகரிக்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டன என இக்கோர நிகழ்வை நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

பாரிய மனிதப் படுகொலை

ஆனாலும் யாழ் மருத்துவமனை வளாகத்தினுள் இருந்து தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இடையில் அகட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்றும் இந்திய இராணுவம் தெரிவித்தது. லெப். ஜெனரல் தெப்பிந்தர் சிங் இதனை மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், இத்தாக்குதல் தூண்டுதல் அற்ற பொதுமக்கள் படுகொலைகள் என மனித உரிமை அமைப்புக்களும், இலங்கை அரசும் தெரிவித்தது.

இலங்கை அரசு கூட இத்தாக்குதலை மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என 2008 ஆம் ஆண்டில் கூறியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு, மற்றும் ஜோன் ரிச்சார்ட்சன் போன்ற மேற்குலகக் கண்காணிப்பாளர்கள் மற்றும் பலர் இது ஒரு மனிதப் படுகொலைகள் எனக் கூறியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *