அக்கினிப் பறவை…. கவிதை… Pax ரவிச்சந்திரா

குண்டு வீச்சில் கருகிய
தாலிகள் எத்தனை?
கொடுஞ் சிறைகள் கலைத்த
குங்குமங்கள் எத்தனை?
எரியும்; டயர்களில் உருகிய
மாங்கல்யங்கள்; எத்தனை?
துப்பாக்கிச் சூட்டில் அறுந்த
மஞ்சள் கயிறுகள் எத்தனை?
சூடிய மணமாலை வாடுமுன்-மலர்களும்
மஞ்சளும், குங்குமமும் கலைந்ததென்ன?
மணமாலையே-மணமகனிற்க்குப்
பிணமாலையானதென்ன?

பூச்சூடும் பூவே மணமாலை சூடுமுன்
கருகிய பூவானதென்ன?
சூடிக் கொடுத்த மணமாலையை
அறுத்துப் பறித்த அராஜகம்தான் என்ன?
அடிவயிற்றில் அவியா நெருப்பெரிய
கைத்தலம் பற்றிய கணவன் மடிந்திட
கைமை பூண்ட இளந் தாய்கள்; -தமிழ்
ஈழத்தில் எத்தனை? எத்தனை?
பூவாய் பூத்த பூவையரைக்
கறபழித்து கொன்ற அராஜகம்
தாய்களையும், பேய்கள் சிதைத்து
காமம் தணித்த அசுர யாகம்
கண்ணீரால் கழுவியும் போகாத கறை
களம் நிறைத்த சோகமோ பெருஞ்சுமை
தீச்சூடி, தீயில் மலர்ந்த பெண்மை
கற்பே பெண்ணின் மேன்மை
இளந் தந்தையோ
மாலை சூடிய படமானான்
இளம் விதவையோ
கண்ணீர் சூடி கருகிய மலரானாள்

அக்கினியாற்றிலும், எரிமலைக் குழம்பிலும்
பெண்மையின் எதிர்நீச்சல்
பூபாளம் பாடும் புள்ளினமாய்-களத்தில்
விடுதலைப் பறவைகளின் தீப்பாய்ச்சல்
மஞ்சளும், குங்குமமும், மாங்கல்யமும்,
கூறையும் அக்கினி வண்ணங்களாயிருப்பது-
சுதந்திரத் தாயே உன் நெஞ்சில்
எரியும் சுடரைச் சுட்டவோ?
கண்ணீரில் விடியும் பொழுதுகள்
கைதும், காணமல் போதலுமாய்
சாயும் பொழுதுகள்-குண்டுச்
சத்தங்களில் கரையும் புள்ளினங்கள்
கூடவே தாய்க்குலங்கள்
முடமாகிப்போன வாழ்வு
கண்ணீர்க் குளமாகிப் போன விழிகள்
களமாகிப் போன தேசம்-இருண்ட
யுத்தமோ இரத்த தோஷம்

அன்பே சிவம்-வாழ்வே தவம்
![]()