உயர் மட்டங்களைச் சேர்ந்தவர்களால் முறைப்பாட்டாளருக்கு அச்சுறுத்தல்

செம்மணி மனித புதைகுழியில் முறைப்பாட்டாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்த சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ், முறைப்பாடுகள் எந்த நிலையங்களுக்கு வழங்கப்பட வேண்டுமோ அந்த நிலையங்களினுடைய உயர் மட்டங்களை சேர்ந்தவர்களாலேயே அச்சுறுத்தல் ஏற்படுகிறது என குற்றஞ்சாட்டினார்.
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பதின்மூன்றாம் நாள் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.
அகழ்வாய்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி சுகாஷ் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனித புதைகுழி வழக்கினுடைய முறைப்பாட்டாளரான கிருபாகரன் சார்பில் இந்த வழக்கில் நான் ஆஜராகிறேன்.சித்துபாத்தி மயானத்தில் தகனமேடை அமைக்கப்பட்ட போது சில எலும்பு பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்தப் பணியாளர்கள் அந்த விடயத்தை அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அதை மாட்டெலும்புகள் என்று கூறி இந்தப் புதைகுழியை மூடி மறைப்பதற்கான முனைப்புகள் ஆரம்பத்தில் எடுக்கப்பட்டது.
அதற்கு எதிராக கிருபாகரனால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டு நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியதால் தான் இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இடையிலே இந்த வழக்கை திசை திருப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒரு கட்டமாக முறைப்பாட்டாளருக்கு பல்வேறு அச்சுறுத்தல்களும் இடையூறுகளும் பல்வேறுபட்ட தரப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதிலே ஊடகங்களுக்கும் மக்களுக்கும் நாங்கள் தெரிவிக்கின்ற விடயம் என்னவென்றால், இங்கே தோண்டப்பட்டு கொண்டிருப்பவை மாத்திரம் அல்ல மனித புதைகுழி. இது ஒரு அடையாளம். இதைத் தாண்டி இதைச் சுற்றி பல்வேறு பட்ட புதைகுழிகள் இருக்கலாம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அவையும் அகழப்பட வேண்டும். ஒட்டுமொத்த நீதிக்கான குரல்கள் பெரிய அளவில் வெளிக்கிளம்ப வேண்டும்.இந்த விடயத்தை நாங்கள் மக்களுக்குத் தெரிவிக்கின்றோம். ஏனைய விடயங்களை வெகு விரைவில் ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்திலே அம்பலப்படுத்துவோம்.
முறைப்பாடுகள் எந்த நிலையங்களுக்கு வழங்கப்பட வேண்டுமோ அந்த நிலையங்களினுடைய உயர் மட்டங்களை சேர்ந்தவர்களாலேயே அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனாலேயே ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு மீண்டும் மீண்டும் சர்வதேச விசாரணை ஒன்று மாத்திரமே தீர்வாக அமையும் என்று வலியுறுத்துகிறோம்.
முறைப்பாட்டாளருக்கான அச்சுறுத்தல் தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
எங்களுடைய நிலைப்பாடு சர்வதேசத்தினுடைய கண்காணிப்பு மாத்திரம் அல்ல முற்றுமுழுதான சர்வதேச கண்காணிப்புக்கும் சர்வதேச விசாரணைக்குமே நாங்கள் வலியுறுத்துகிறோம். அதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து சகல மட்டங்களுக்கு நாம் எடுத்து கூறுவோம் – என்றார்.
![]()