இலங்கை

மனிதப் புதைகுழி எலும்புக் கூடுகளை ஆராய இலங்கையில் காபன் பரிசோதனைக் கூடம்

செம்மணி மட்டுமன்றி நாட்டிலுள்ள சகல மனித புதைக்குழிகள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி நீதியை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க, மனித புதைக்குழிகளில் மீட்கப்படும் எலும்புகூடுகள் தொடர்பில் ஆய்வுகளை வேகமான மேற்கொள்வதற்காக காபன் பரிசோதனை கூடத்தை இலங்கையில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கையில்,

வடக்கில் மனித புதைகுழிகள் உருவாக முன்னர் தெற்கில் மனித புதைகுழிகள் உருவாகியிருந்தன. குறிப்பாக 1994ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்கு வந்தமையானது வடக்கு புதைகுழிகள் மூலம் அல்ல. தெற்கில் சூரியகந்த போன்ற புதைகுழிகள் ஊடாகவே ஆகும். மாத்தளையிலும் மனித புதைகுழி இருந்தது. அதுபோன்று வடக்கில் செம்மணி, மண்டைதீவு, திருக்கேதீஸ்வரம், கொக்குத்தொடுவாய், துணுக்காய் ஆகிய இடங்களிலும் மற்றுமம் வடக்கு, கிழக்கில் இன்னும் நூற்றுக்கணக்கில் மனித புதைகுழிகள் உள்ளன. இவை எமது நாட்டின் சாதாரண வகுப்பு மக்கள் பல்வேறு அரசாங்கங்களின் அரசியல் தோல்விகளால் மக்கள் அதற்கு எதிரான போராடும் போது கொல்லப்பட்டவர்களுடையதே.

இதனால் அதற்கான நீதியை நிலைநாட்டுவதற்காகவே இந்த அரசாங்கம் வந்துள்ளது. இதன்படி செம்மணி மட்டுமல்ல மாத்தளை, மண்டைதீவு, திருக்கேதீஸ்வரம் உள்ளிட்ட சகல மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாங்கள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்த போது இந்த விடயம் தொடர்பில் கூறியுள்ளோம். இங்கே கிடைக்கும் எலும்புகூடுகளை டென்டர் முறையில் உலகில் காபன் பரிசோதனை செய்யும் நாட்டுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு அதிகளவான காலம் எடுக்கும்.

குறிப்பாக மாத்தளை மனித புதைகுழியில் பெற்றுக்கொள்ளப்பட்ட எலும்புகூடுகளை அனுப்பும் போது அந்த எலும்புகூடுகளை மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. 140 அளவிலான எலும்புகூடுகள் இருந்தன. இதனால் இவ்வாறானவற்றை அனுப்பி அதனை உறுதிப்படுத்துவதற்கு அதிகளவான காலம் எடுக்கும். இதனால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரிடம் யோசனையொன்றை முன்வைத்தோம். அதாவது காபன் பரிசோதனைக்கான ஆய்வுகூடமொன்றை இலங்கைக்கு வழங்குமாறு கோரினோம். நீதியை நிலைநாட்டுவதில் தாமதமானது நீதியை நிலைநாட்டாமைக்கு சமமானது என்பதனால் இந்த கோரிக்கையை முன்வைத்தோம். இதன்படி செம்மணி மட்டுமன்றி எந்த மனித புதைகுழி தொடர்பிலும் எங்களால் கவனம் செலுத்தாது இருக்க முடியாது. சகல மனித புதைகுழிகள் தொடர்பிலும் நியாயமான விசாரணைகளை நடத்துவோம்.

இதேவேளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் போன்றோர் வரும் போது ஊடக கண்காட்சியை செய்கின்றனர். 34ஆயிரம் பேர் காணாமல் போன கட்சியை சேர்ந்தவர்களே நாங்கள். இதனால் நாம் ஒருபோதும் மனிதப் புதைகுழிகளுடன் விளையாட மாட்டோம். இது எவ்வளவு ஆழமான விடயமாகும். உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும்.

யூடியுப்பர்களை விடவும், ஊடகங்களில் காட்ட முன்னர் எங்களுக்கு அதன் ஆழம் என்ன என்று தெரியும். இதனால் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம். செம்மணி அகழ்வுக்காக நிதியை ஒதுக்கியுள்ளோம். நீதிமன்றத்தின் ஊடாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *