அபினந்தனை கைதுசெய்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரி பயங்கரவாத தாக்குதலில் பலி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் 2019ஆம் ஆண்டு இராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை விரட்டிச் சென்றபோது இராணுவ வீரர் அபினந்தன் வர்தமான் சென்ற மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது பாராசூட் மூலம் வெளியே குதித்த அபினந்தன், பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கினார். இதையடுத்து அவர் பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.
மத்திய அரசின் கடும் எச்சரிக்கை மற்றும் அழுத்தத்தினால் சிறைபிடிக்கப்பட்ட 58 மணிநேரத்தில் அபினந்தன் விடுவிக்கப்பட்டார். அவர் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி அடாரி-வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினார்.
அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கியபோது அவரை சிறைபிடித்தவர் பாகிஸ்தான் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா என்பவர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடமேற்கு பாகிஸ்தான் பகுதியான கைபர் பக்துன்கவா மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான்கள் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர் என பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
![]()