இலங்கை

இஸ்ரேலின் தாக்குதலை கண்டிக்க முதுகெலும்பில்லாத வெளிநாட்டு அமைச்சு

ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் வெட்கப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை பெயர் குறிப்பிட்டு கண்டிப்பதற்கு கூட எமது வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு முதுகெலும்பில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் விசனம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற கறவை மாடு இறக்குமதி செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஐஐ ஆம் பகுதியின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான முற்பணம் வழங்குதல் தொடர்பான 2025.05.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை மற்றும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான 2025.06.04 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் இரண்டாவது அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயேஇவ்வாறு விசனம் தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையை பார்க்கும்போது ஆச்சரியமடைந்தேன். அதில் இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கிடையல் அண்மையில் இடம்பெற்றிருக்கும் சம்பவம் தொடர்பில் நாங்கள் எமது அவதானத்தை செலுத்தி இருக்கிறோம் என்றே தெரிவித்திருக்கிறது. அவதானம் செலுத்துவதற்கு அங்கு இடம்பெற்றது சுனாமியா? பூமி அதிர்ச்சியா?. இது வேண்டுமென்று திட்டமிட்டு இன்னுமொரு நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், இதற்கு காரணமானவர்களை பெயர் குறிப்பிட்டு கண்டிப்பதற்கு கூட எமது வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு முதுகெலும்பில்லை.

இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் சர்வதேச சட்டம், அணிசேரா நாடுகளின் கொள்கை என அனைத்தையும் ஒருபக்கம் போட்டுவிட்டு வெற்று அறிக்கையையே வெளிநாட்டலுவல்கள் அமைச்சுவெளியிட்டிருக்கிறது. அரசாங்கம் வெளிநாடுகளில் இருக்கும் தங்களுக்கு வேண்டிய சில தலைவர்களின் தயவுக்கு ஏற்றவகையிலே இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இரண்டு நாடுகள் தொடர்பில் சாதாரண அறிக்கையே வெளியிடப்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சமப்படுத்தியவகையிலேயே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலால் யார் பாதிக்கப்பட்டார்கள் என்பதைக்கூட வெளிவிவகார அமைச்சினால் தெரிவிக்க முடியாமல் இருக்கிறது.ஏனெனில் அரசாங்கம் மேற்குல நாடுகளின் தலைவர்களின் தயவை நாடுகிறது. இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இரு நாடுகளுக்கிடையில் மோதல் இடம்பெறும்போது இலங்கை ஒரு நாட்டுக்கு மாத்திரம் பாரபட்சமாக செயற்படுகிறது.என்ன நடந்தது என்றுகூட குறிப்பிடுவதில்லை. இதன் தாக்கம் பற்றிகூட குறிப்பிடுவதில்லை. எனவே வெளிவிவகார அமைச்சு அறிக்கையிடும் போது நேர்மையாக உண்மை நிலைமையை தெரிவித்து வெளியிடவேண்டும். இல்லாவிட்டால் எந்த அறிக்கையையும் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *