இலங்கை

தேசிய மக்கள் சக்தி வசமானது கொழும்பு மாநகர சபை

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பல்தாசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ரீசா ஸரூக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு, உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போது மேயர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுமா அல்லது திறந்த வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுமா என்பது தொடர்பில் சபையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

மாநகர சபையின் மேயர் தெரிவு முறைமை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன பகிரங்க வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்தன. தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்கள் இந்த முன்மொழிவை எதிர்த்தனர்.

நீண்ட நேர வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர், நேரடியாக கொழும்பின் புதிய மேயரைத் தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கான முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பல்தாசர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ரீசா ஸரூக் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்தவொரு கட்சியோ அல்லது சுயேட்சைக் குழுவோ முழுமையான வெற்றியைப் பெறவில்லை.

தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 5 உறுப்பினர்களும் தெரிவாகினர்.

மேலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 03 சார்பில் 3 உறுப்பினர்களும், சர்வஜன அதிகாரம் சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய சமாதான கூட்டணி சார்பில் 2 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு எண் 04 மற்றும் 05 சார்பில் தலா 2 உறுப்பினகளுமாக 04 உறுப்பினர்களும் தெரிவாகினர்.

மேலும் ஐக்கிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசிய விடுதலை முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு, சுயேட்சைக் குழு எண் 01 மற்றும் சுயேட்சைக் குழு எண் 02 சார்பில் தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் கொழும்பு மாநாகர சபைக்கு தெரிவாகினர்.

எனினும், 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு ஒரு கட்சிக்கு 59 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

எந்தவொரு கட்சியும் 50 சதவீதத்திற்கு மேல் பெரும்பான்மையை பெறாமையால், கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *