உலகம்

விபத்துக்கு முன் விமானி கூறியது என்ன? வெளியான கடைசி வார்த்தைகள்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787- 8 டிரீம்லைனர்’ விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விமானம் விபத்துக்கு முன் இறுதி நொடியில் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி விடுத்த கடைசி தகவல் என்னவென்பது குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாகக் கிடைத்திருக்கின்றன.

அதன்படி, விமானம் விபத்துக்குள்ளாகும் போது கடைசி நொடியில் விமானி “மேடே.. மேடே.. மேடே.. நோ பவர்.. நோ த்ரஸ்ட்.. கீழே விழப்போகிறோம்” (Mayday.. Mayday.. Mayday.. No Power.. No thrust.. Going Down) எனக் கூறியிருக்கிறார். விபத்துக்குள்ளாகும் முன்பு கடைசி நொடியில் விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி ‘மேடே அழைப்பு’ விடுத்தது ஏற்கனவே கூறப்பட்டது. விமானப் பயணங்களின்போது ஒருபோதும் கேட்கக் கூடாத வார்த்தை என்று சொல்லப்படுவதுதான் ‘மேடே கால்’ அல்லது ‘மேடே அழைப்பு’. ஏனென்றால், அவசர காலத்தில் உதவிக்காக விமானங்களின் விமானிகள் பயன்படுத்தி வரும் இரகசிய வார்த்தைதான் இது.

அதன்படி, இயந்திரம் முழுமையாகச் செயலிழப்பு அல்லது விமானத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை போன்ற உயிருக்கே ஆபத்தான மிகவும் அவசர காலத்தில் விமானிகள் இந்த ‘மேடே கால்’ வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ‘m’aidez’ என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து இந்த மேடே என்ற வார்த்தை உருவானது. இந்த வார்த்தையின் பொருள் ‘உதவி செய்யுங்கள்’ என்பதுதான்.

விமானிகளால் கணிக்க முடியாத பெரிய ஆபத்து ஏற்படும் அவசர சூழல் என்றால், இந்த வார்த்தையைக் கண்டிப்பாக மூன்று முறை கூற வேண்டும் என்று விமானிகள் கடைப்பிடிக்கும் விதி. அதனால், தான் விமானப் பயணத்தில் இந்த வார்த்தையைக் கேட்கக்கூடாது எனக் கூறுவார்கள். இந்த வார்த்தையைத்தான் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகும் முன் கடைசி நொடியில் விமானி விமானக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புக் கொண்டு கூறியிருக்கிறார்.

இதன்கூடவே, நோ பவர் என மின்சாரம் இல்லாததையும் விமானி கடைசி நொடியில் கூறியிருக்கிறார். அதேபோல் No thrust என்கிற வார்த்தையையும் விமானி கூறியிருக்கிறார். அதாவது, விமானம் மேலே எழும்புவதற்குப் போதிய அளவு உந்துவிசை இல்லை என்பதன் பொருளே No thrust. பொதுவாக விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விமானத்தை மேலே செலுத்துவதற்குத் தேவையான சக்தியை இயந்திரங்கள் உற்பத்தி செய்யவில்லை என்பதைக் குறிக்கும் விதமாக இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்.

அதன்படி, அகமதாபாத்தில் No thrust வார்த்தையைக் கூறி கீழே விழப்போகிறோம் என்பதைக் கூறும் விதமாக Going Down என்றும் கடைசி நொடியில் விமானி கூறியிருக்கிறார். விபத்துக்கு முன் இறுதி 5 விநாடிகளில் விமானி இந்த வார்த்தையைக் கூறியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அபாயகரமான சூழலில் தான் விமானிகள் இந்த மேடே அழைப்பை விடுத்துள்ளதாகக் கூறியுள்ள அதிகாரிகள், விமானத்தில் மின்சாரம் இல்லாமல் போனதற்கும் இயந்திரத்தில் உந்துவிசை கிடைக்காமல் போனதற்கும் காரணம் என்னவென்பதை விசாரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *