இலங்கை

சாவகச்சேரி நகர சபை ஆட்சியை கைப்பற்றிய தமிழ் தேசிய பேரவை

சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளை தமிழ் தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது.

உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்ற தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தேர்வு நிகழ்வில் இந்த முடிவு எட்டப்பட்டது.

தவிசாளர் பதவிக்கு, தமிழரசு கட்சி சார்பில் அ. கயிலாயபிள்ளை மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் வ. சிறிபிரகாஸ் முன்மொழியப்பட்டனர்.

பகிரங்க வாக்கெடுப்பில், தமிழரசு கட்சியின் வேட்பாளர் அ. கயிலாயபிள்ளை, தமிழரசு மற்றும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் ஆதரவுடன் 7 வாக்குகளைப் பெற்றார்.

அதேபோல், தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர் வ. சிறிபிரகாஸும் 7 வாக்குகளைப் பெற்றார். இருவரும் சம வாக்குகளைப் பெற்றதால், திருவுளச் சீட்டு முறைமையின் மூலம் தவிசாளராக வ. சிறிபிரகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

உப தவிசாளர் தேர்வில், தமிழரசு சார்பில் அ. பாலமயூரன் மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் ஞா. கிஷோர் போட்டியிட்டனர்.

இவர்களும் சம வாக்குகளைப் பெற்ற நிலையில், திருவுளச் சீட்டு மூலம் ஞா. கிஷோர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி நடுநிலை பேணியது.

இந்நிலையில், தமிழ் தேசிய பேரவை சார்பில் சாவகச்சேரி நகர சபைக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு பெண் உறுப்பினருக்கு  நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது, அதற்கிடையில் இந்த தேர்வுகள் நடைபெற்றன.

இந்த தேர்வு நிகழ்வின்போது, தமிழரசு கட்சி சார்பில் பிரதிச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சாயந்தனும், தமிழ் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *